இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெற்றிகரமாக சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இறக்கி சரித்திர சாதனை படைத்தது. விண்கலனில் இருந்து விக்ரம், பிரக்யான் இரண்டும் நிலவின் மேற்பரப்பில் பல்வேறு தகவல்களை சேகரித்து இஸ்ரோவுக்கு அனுப்பி இருந்தது.
தற்போது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவின் மேற்பரப்பில் உறங்கிக் கொண்டுள்ளன. செப்டம்பர் 22ஆம் தேதி அதாவது நாளை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. சூரிய ஒளி இல்லாத காரணத்தால் செயல்படாமல் இருந்த விக்ரம் மற்றும் பிரக்யான் இரண்டும் சூரிய சக்தி கிடைத்து செயல்படத் தொடங்கும். நிலவின் தென் துருவத்தில் அனைத்து நாட்களும் சூரிய ஒளிபடுவதில்லை.
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் ஏசியாநெட் குழுமத்தின் செயல் தலைவர் ராஜேஷ் கல்ரா சிறப்பு நேர்காணல் மேற்கொண்டார்.
ராஜேஷ் கல்ரா: எப்போது எல்லாம் நாட்டை கவுரவிக்கும் வகையில் எதையாவது செய்கிறோமோ அப்போது நாம் பெருமைப்படுகிறோம். அப்படி நாம் அடைந்த பெருமை சந்திராயன் 3 விண்கலம் நிலவில் கால் பதித்த நாள். உலகமே இன்று வியந்து பார்க்கிறது. எப்படி குறைந்த பட்ஜெட்டில் இந்த சாதனையை இந்தியா சாதித்தது என்று உலகமே ஆச்சரியத்தில் உள்ளது.
அந்த பெருமைக்குரியவர். அறிமுகம் தேவையில்லை அவர்தான் சோம்நாத். வாழ்த்துக்கள் சோம்நாத். நிலவில் விக்ரம் தாவிச் சென்ற விஷயம் ஆச்சரியமானது. எதிர்பார்க்காத ஒன்று.
ராஜேஷ்: செப்டம்பர் 22 (நாளை) அன்று சூரிய ஒளி கிடைக்கும்போது விக்ரம், பிரக்யானுக்கு என்ன நடக்கும்?
சோம்நாத்: விக்ரம் மற்றும் ரோவரில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் செயல்படத் துவங்கும். இரண்டும் செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் கட்டளை அனுப்புவோம். செப்டம்பர் 22ஆம் தேதி வரலாற்றில் பதிவாகும் நாளாக இருக்கும்.
ராஜேஷ்: கட்டளை முதலில் எதற்கு செல்லும், விக்ரம் அல்லது ரோவர்?
சோம்நாத்: முதலில் விக்ரம். ரோவர், விக்ரம் இடையே கட்டளை பரிமாறப்படும். கேமரா படம் எடுக்கும்.
ராஜேஷ்: எப்படி கட்டளை செல்லும்?
சோம்நாத்: வேறு வேறு மாதிரியான கட்டளை அனுப்புவோம். கடிகாரம் இருக்கிறது. அதற்கு கட்டளை அனுப்புவோம். கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். மீண்டும் படிப்போம். செக் செய்வோம். பின்னர் செயல்படுத்துவோம். சிக்னல் டிராவல் பொருத்து கட்டளை சென்று அடையும்.
ராஜேஷ்: வேறு திசையில் கேமரா இருந்தால் நமது கட்டளை எடுத்துக் கொள்ள எவ்வளவு நேரமாகும்?
சோம்நாத்: சிறிது நேரத்தில் எடுத்துக் கொள்ளும்.
ராஜேஷ்: எந்த வேகத்தில் நீங்கள் செய்தியை பெறுவீர்கள்?
சோம்நாத்: பேண்ட் பயன்படுத்துவதைப் பொருத்தது. சிக்னல் பொருத்தது. டிரான்ஸ்மிட்டர் பொருத்தது. எக்ஸ் பேண்ட் இந்த முறை பயன்படுத்தி உள்ளோம். ஆண்டனா பொருத்தது. பிரக்யான் படம் எடுத்து, ரோவருக்கு அனுப்பும். அது இஸ்ரோவுக்கு அனுப்பும்.
ராஜேஷ்: அடுத்தது ஆதித்யா 1 பற்றி கூறுங்கள்.
சோம்நாத்: ஆதித்யா 1 விண்கலம், எல் 1 பாயின்ட் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 110 நாட்கள் ஆகும். சூரியன், பூமி, எல் 1 பாயின்ட் அனைத்தும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் கவனித்துக் கொண்டே இருப்போம்.
ராஜேஷ்: சந்திரயான் 3 விண்கலத்திற்கான கருவிகள் எங்கு தயாரிக்கப்பட்டன, இணைக்கப்பட்டன?
சோம்நாத்: கருவிகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்தன. பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டன. பத்து முறை இங்கு வைத்து அசம்பிள் செய்து இருக்கிறோம்.
ராஜேஷ்: விக்ரம் பேலோடு ஸ்டார்ட் செய்ய எவ்வளவு நேரமானது?
சோம்நாத்: அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. 6 முதல் 7 ஆண்டுகள் ஆனது. இன்ஜினியரிங் மாடல். இதற்குப் பின்னர் புரோட்டா மாடல். பின்னர் பிளைட் மாடல் டெஸ்ட். கம்யூனிகேஷன் சாட்டிலைட்டுக்கு இதெல்லாம் தேவையில்லை. பிளைட் மாடல் மட்டும் இருந்தால் போதும். இதுதான் பொதுவான செயல்முறை.
ராஜேஷ்: ஓராண்டில் புதிய கம்யூனிகேஷன் சாட்டிலைட் தயாரிக்க முடியுமா?
சோம்நாத்: அனைத்தும் தயாராக இருந்தால் உடனடியாக ஓராண்டில் அசெம்பிள் செய்து டெஸ்ட் செய்து விடுவோம்.
ராஜேஷ்: சந்திரயான் 3-ல் எந்தப் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை?
சோம்நாத்: அனைத்தும் எலக்ட்ரானிக் சாதனத்தால் ஆனவை. சிப்ஸ், ஹாட்வேர், டிடெக்டர்ஸ் உள்பட என்னவெல்லாம் நீங்கள் வெளியே பார்க்கிறீர்களோ அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. சிறிய பொருட்கள் செய்வதற்கு நாற்பது சதவீதம் செலவாகிறது. 60 சதவீதம் சாட்டிலைட்டிற்கு செலவாகிறது.
ராஜேஷ்: இறக்குமதி கருவிகளுடன் ஒப்பிடுகையில்?
சோம்நாத்: இந்திய கம்பெனிகளில் தயாரிக்கப்படும் கருவிகள் தரமானதாக இருக்கின்றன. எலக்ட்ரானிக் கேபிள் முன்பு இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது உள்நாட்டிலேயே மூன்று தனியார் நிறுவனங்களில் இருந்து பெறப்படுகிறது.
ராஜேஷ்: கேபிள் தவிர வேறு எவை தனியார் நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது?
சோம்நாத்: மெமரிஸ், டிவசைஸ், கெப்பாசிடர்ஸ், சென்சார்ஸ், லென்சஸ், சோலார் பேனல் என அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. சோலார் செல் இறக்குமதி செய்யப்படுகிறது.
ராஜேஷ்: சோலார் பேனல் எந்தளவிற்கு மின்சாரம் தயாரிக்கிறது.
சோம்நாத்: மூன்று பக்கம் சோலார் பேனல்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் மட்டும்தான் 1.4 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
ராஜேஷ்: எந்தளவிற்கு எரிபொருள் இன்னும் மிச்சம் இருக்கிறது?
சோம்நாத்: நிலவில் தரையில் இறங்கியது போக 90 கிலோ கிராம் இன்னும் மிச்சம் இருக்கிறது. அங்கு நிலவும் வெப்பத்தைப் பொருத்து அனைத்து மாற்றங்களும் இருக்கும்.
ராஜேஷ்: லாஞ்ச் செய்யும்போது, கம்ப்யூட்டர் உடனடியாக நிறுத்தக் கூறுகிறது. அது எப்படி?
சோம்நாத்: 2000 அளவுகள் இருக்கின்றன. கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தலாம். அளவுகளை செக் செய்து கொண்டே இருக்கும். இதை டிரிப்பிள் மாடுலர் ரிட்டென்சி என்று கூறுவோம்.
ராஜேஷ்: ககன்யா எந்தளவிற்கு இருக்கிறது?
சோம்நாத்: இது மிகவும் கடினமான ஒன்று. லாஞ்ச் செய்வது எளிது. திரும்ப வருவது கடினம். சவால்கள் அதிகமாக இருக்கிறது. விண்கலத்தில் செல்வபர்களின் நலன் முக்கியமானது. மிகவும் ஆபத்தானது. நேரம் எடுக்க வேண்டியது இருக்கிறது என்று அரசிடம் கூறி இருக்கிறேன். அதிக பரிசோதனைகள் அடுத்த ஓராண்டில் நடக்கும். 2025க்கு முன்பு இது நடக்காது.
ராஜேஷ்: நமது சந்திரயான் 3 விண்கலம் ஏன் 40 நாட்கள் எடுத்துக் கொண்டது. ரஷ்யாவின் விண்கலம் தோல்வியை தழுவி இருந்தாலும், ஐந்து நாட்களில் நிலவுக்கு சென்றது ஏன்?
சோம்நாத்: அவர்கள் பயன்படுத்தும் ராக்கெட் அந்த மாதிரியானது. எல்பிஎம் 3. நான்கு டன் கொண்டது. அவர்கள் பயன்படுத்தியது 6 டன் ஜிடிஓ. ராக்கெட் பவர்புல் ஆக இருக்கும்போது, சாட்டிலைட் பவர்புல்லாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆர்பிட்டிலும் ஆற்றல் கிடைக்கும். சாட்டிலைட் இன்ஜின்கள் மிகவும் ஆற்றல் மிக்கது. விண்கலத்தில் பிரிந்த புரபல்சன் நிலவின் மேற்பரப்பில் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
ராஜேஷ்: நிலவில் உலகம் இதுவரை அறியாத ஒன்றை விக்ரம் அல்லது பிரக்யான் அனுப்பி இருக்கிறதா?
சோம்நாத்: நிலவின் நிலப்பரப்பு, ஹீட்டர்ஸ், இன்சுலேட்டர்ஸ், ரோவர் வீல் சென்றது, விக்ரம் தாவிச் சென்றது, நிலவில் மாசு ஆகியவற்றை கூறலாம். இதுவரைக்கும் நிலவில் அதிகமான தூசு, மாசு இருக்கும் என்றுதான் கூறப்பட்டு வந்தது. ஆனால், மாசு அதிகமாக இல்லாதது ஆச்சரியமான விஷயம்தான். எதனால் அப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக தண்ணீரால் அல்ல.
ராஜேஷ்: இப்போது நாம் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை கூடம் 2ல் இருகிறோம்! கூறுங்கள்.. நாம் இங்கு காண்பது என்ன?
சோம்நாத்: இது ஒரு செயற்கைகோள். விண்ணில் ஏவுவதற்கு தயாராக உள்ளது. இது XPoSat - X-ray Polarimeter Satellite, இது முற்றிலும் கருந்துளையை (Black Hole) ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டது. பொதுவாகவே நட்சத்திரம் அருகே வரும்போது, கருந்துளையில் அதிக ஈர்ப்பு விசை இருப்பதால் நட்சத்திரங்கள் கருந்துளை நோக்கி ஈர்க்கப்பட்டு விழுங்கப்பட்டு விடும். அவ்வாறு ஈர்க்கப்படும் போது அவை அதிகப்படியான கதிர்வீச்சுகளை வெளியிடும். அவைகளை இந்த செயற்கைகோள் பதிவு செய்து ஆய்வு செய்யும்.
ராஜேஷ்: ஓகே, இவை எல்லாம் என்ன?
சோம்நாத்: இவை ஒவ்வொன்றும் செயற்கைகோள்ளை ஒருங்கிணைப்பு செய்யும். இது சுழலும் பகுதி. எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். நாம் அனைத்துப் பகுதியையும் ஒருங்கிணைக்க வேண்டும். இது ஒரு ஆட்டோமொபைல் ஒருங்கிணைப்பு பகுதியை போன்றது.
அங்கு பாருங்கள், முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு உள்ளது. இது, indian data relay satellite system இது ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக பொருத்தப்பட உள்ளது. Crew module சுற்று வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும். விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக புவியுடன் தொடர்பு கொள்ள இது உதவும். உலகம் முழுவதிலும் எங்களுக்கான ஆராய்ச்சி மையங்கள் இல்லை. அதனால், நாம் என்ன செய்கிறோம் என்றால், Crew member நேரடியாக இந்த செயற்கைகோளை தொடர்பு கொள்வார். அந்த செய்திகளை சமிக்ஞைகளாக இந்த செயற்கைகோள் நமக்கு அளிக்கும். இதுவும் புவி சுற்றுவட்டப்பாதையில் இயங்கி கொண்டிருக்கும். ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக இரு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
ராஜேஷ்: செயற்கைகோள் மற்றும் தொலைதொடர்பு பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் போது, நேவிக் (Navic) பற்றி பரவலாக பேச்சு அடிபடுகிறது.
சோம்நாத்: முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நேவிக் உருவாக்கப்பட்டது வேறு ஒரு தேவைக்காக. GPS-ற்கு மாற்றாக இது உருவாக்கப்பட்டது. ஜிபிஎஸ் பொதுவாக 20 மீட்டர் வரையிலான துல்லியமான தகவல்களை அளிக்கிறது. அதற்கு மேலும் அளிக்கிது. ஆனால், நேவிக் 3 மீட்டர் வரை துல்லிய தவகல்களை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஏனெனில் நகரும் செயற்கைகோள் கிடையாது. இது நிலையான செயற்கைகோள். தத்துவ அமைப்பைக் கொண்டது. விண்ணில் செலுத்தப்பட்டதற்கு அப்பறம் உண்மையாக என்ன நடந்தது என்றால், நம் பாதுகாப்பு அமைப்பு உறுதியாக இல்லாததால் நிறுத்தப்பட்டது. அனைத்து சூழ்நிலையும் கருத்தில் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக பலதரப்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆர்மி, நேவி அனைவரது தளவாடங்களுடன் பரிசோதிக்கப்பட்டது. அவை அனைத்தும் GPS பொருத்தப்பட்ட தளவாடங்கள். அவை ஜிபிஎஸ்-லிருந்து நேவிக்-க்கு மாற்ற பெரிய மற்றும் நீண்ட கால அளவிலான மாற்றங்கள் தேவைப்பட்டது. ஹார்டுவேர் மாற்றம், சாஃப்ட்வேர் மாற்றம் அவை. கண்டிப்பாக ஜிபிஎஸ்-லிருந்து நேவிக் விரைவில் மாற்றப்படும்.
அடுத்தது, அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அனைவரும் இதை பயன்படுத்தும் வகையில் இதை எளிதில் கொடுத்துவிட முடியாது. ஏனென்றால் frequency (அதிர்வெண்) பொதுவாக ஜிபிஎஸ் எல்-1 பேண்டு, மற்றும் எல்2 பேண்டு. இவ்விரு பேண்டுகளையும் நாங்கள் மறுத்து வருகிறோம். நேவிக் எஸ் பேண்டு மற்றும் எல் 5 பேண்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேண்டுகள் நம் மொபைல்களில் அல்லது கம்ப்யூட்டர்களில் இருப்பது இல்லை. ஒருவேளை நேவிக் பயன்படுத்த விரும்பும்போது அவர்களது மொபைலில் எஸ் பேண்டு மற்றும் எல்5 பேண்டு பொருத்தப்பட வேண்டும். அதற்கான இட அமைப்பு, ஆண்டெனா அனைத்தும் செய்யப்பட வேண்டும். எனவே, நாம் என்ன முடிவெடுத்தோம் என்றால், எல்1 மற்றும் எ2 பேண்டுகளை நேவிக்கில் பொருத்தி இப்போது விண்ணிலும் செலுத்தப்பட்டுள்ளது. இது உயர்மட்ட பாதுகாப்பான சமிக்ஞைகளை வழங்கும். நேவிக் செயற்கோள் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சி விரைவில் செலுத்தப்படும். நீங்கள் கூட கேள்விப்பட்டு இருப்பீர்கள் சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் கூட எல்1 பேண்டுடன் கூடிய நேவிக் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் நினைக்கிறேன் இது இப்போது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடையும். பஸ் டிராக்கிங், ரயில்வே டிராக்கிங் பெரும் உதவியாக இருக்கும். இது ஏற்கனவே எல்5 பேண்டு மற்றும் எஸ் பேண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி எல்-1 பேண்ட் மிகவும் பிரபலமடையும்.
ராஜேஷ்: இங்கிருந்து இவ்வளவு பொருட்களும் எவ்வாறு ஶ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது?
சோம்நாத்: எங்களிடம் பெரிய பெரிய டிரக் கண்டெய்னர்கள் உள்ளன. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் 9-10 ஆண்டுகளாக உதவி வருகின்றனர். வானிலை உதவிகள், சாலையோர வயர் அகற்றம் அனைத்தும் தேவைப்படும்போது செய்து கொள்வோம். இப்போதும் எங்கள் கண்டெய்னர்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. நார்மலான டிராஃபிக்குகளிலும் கண்டெய்னர்கள் பயனிக்கும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மதிப்பு பல கோடிகள் அல்லவா.
ராஜேஷ்: வணிகமயமாக்கலில் என்ன மாதிரியான சவால்கள் உள்ளது. மற்ற நாடுகளைவிட நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம்?
சோம்நாத்: செயற்கைகோள் செலுத்துவதில் வணிகமயமாக்கல் இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது. அமெரிக்காவின் டைட்டன், டெல்டா இதில் வெற்றியடையவில்லை. அவர்களும் அரசின் ராக்கெட் மூலமே விண்ணில் செலுத்துவதை விரும்புகின்றன. ஸ்பேர் எக்ஸ் வெற்றியடைந்துள்ளது. ஏனெனில் அதன் மறு பயன்பாட்டு வடிவம் கொண்ட ராக்கெட்டுகள் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு பெரிதும் உகந்ததாக இருக்கிறது. ஆனால், வருவாய் அடிப்படையில் அதுவும் பெரிய அளவிலான வெற்றியாக கருதப்படாது. செயற்கைகோள் செய்வது, உருவாக்குவது ஏற்கனவே வணிகமயமாக்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் செயற்கைகோள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.
ராஜேஷ்: எப்படி உங்களால் குறைந்த செலவில் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முடிகிறது?
சோம்நாத்: முதலில் செயற்கைகோளின் தேவை மற்றும் அதன் வடிவமைப்பு கருத்தில் கொள்ளப்படுகிறது. பின்னர், அதன் உதிரிபாகங்கள் இங்கேயே விஞ்ஞானிகளால் தயாரிக்கப்படுகிறது. யாருக்கும், எங்கேயும், எப்போதும் வெளிப்புற தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பது இல்லை.
இங்கே பாருங்கள் ஒரு ஃபிக்சர் உள்ளது. இதை நாம் வெளியில் வாங்கலாம். ஆனால் இது இங்கேயே உருவாக்கப்பட்டது. இது பார்ப்பதற்கு மிகவும் எளிமையானது. சமீபத்தில் நாசாவுக்காக இஸ்ரோ ஒரு செயற்கைகோள் தயாரித்தது. அதற்காக இதை அவர்களுக்கு அனுப்பிவைத்தோம். இது அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
ராஜேஷ்: இது எதனால் செய்யப்படது?
சோம்நாத்: இது இரும்பால் வடிவமைக்கப்பட்டது. மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இதை நாம் எந்த பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம். மேலும் கீழும் நகர்த்தவும், இட, வலம் திருப்ப்பவும் முடியும். இங்குள்ள அனைத்து தளவாடங்களும், பரிசோதனை அமைப்புகளும், இங்கேயே இங்கிருக்கும் விஞ்ஞானிகளைக் கொண்டே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அமைப்பைதான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் கையாண்டு வருகிறது. அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அங்கேயே அப்பணிகளை செயல்படுத்தி வருகிறது.
ராஜேஷ்: ஆட்கள் தேர்வு பற்றி கூறினீர்கள்! இந்த நாட்டில் திறமையான ஆட்களை தேட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
சோம்நாத்: இது ஒரு பெரிய கேள்வி! உண்மையை கூறவேண்டும் என்றால் இல்லை! ஒரு விசயத்தை கூற விரும்புகிறேன். ஆட்கள் தேர்வுக்காக சமீபத்தில் ஒரு ஐஐடியை அணுகினோம் (பெயரை கூற விரும்பவில்லை) அங்கு அவர்களுக்கும் ஒரு காணொளி காட்டப்பட்டது. இதில் பணியின் பெயர், பணிக்கு தேவையான திறமை அனைத்தும் இடம்பெற்றிருந்து. இறுதியாக இஸ்ரோவில் வழங்கப்படும் சம்பளம் காட்சிப்படுத்தப்பட்டது. அடிப்படை சம்பளத்தை கண்டவுடன் கூடத்தில் இருந்து சுமார் 60% பேர் எழுந்து சென்றுவிட்டனர்.
ராஜேஷ்: ஐஐடியில் படித்தவர்கள் இந்த அடிப்படை சம்பளத்திலிருந்து வாழ்க்கையை தொடங்க நினைப்பதில்லை. பணம் இங்கு ஆட்களை கவராது.
சோம்நாத்: அடிப்படை தகுதிகளை கொண்ட நபர்களை வைத்து இங்கு பணிகள் மேற்கொள்ளபடுகிறதா என நீங்கள் கேட்கலாம்? ஆம், தகுதிவாய்ந்த நபர்கள் மூலம் இஸ்ரோ இயங்கி வருகிறது.
ராஜேஷ்: இஸ்ரோவில் அடுத்தடுத்த வெற்றிகளை காண முடிகிறது. வெளிநாட்டு இயந்தியர்கள் இதில் பங்கு கொள்ள முன்வருகிறார்களா?
சோம்நாத்: ஆம், நல்ல திறமைவாய்ந்த மூத்தவர்கள் எங்களுக்கு எழுதுகிறார்கள், நாங்களும் உங்களோடு பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறோம் என. இது போன்ற வாய்ப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இல்லை அல்லவா!
ராஜேஷ்: இஸ்ரோவின் வளர்ச்சி குறித்து பள்ளி, கல்லூரிகளுக்கு நீங்கள் விளக்குகிறீர்களா? அதன் அனுபவம் எப்படி இருக்கும்!
சோம்நாத்: ஆம், நாங்கள் தொடர்ச்சியாக செய்துகொண்டு வருகிறோம். ஏராளமான மாணவர்கள் இங்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு வானியல் துறை குறித்து விளக்கம் அளிக்கிறோம். அனைத்து சோதனைக் கூடங்களும் நேரடியாக காட்சிப்படுத்தி விளக்கி வருகிறோம். நாங்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று எங்களின் தொழிநுட்பம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு குறித்தும் காட்சிப்படுத்தி விளக்குகிறோம். லட்சக்கணக்கான இளைஞர்கள் இஸ்ரோவுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள்.
ராஜேஷ்: சந்திராய்3 மற்றும் ஆதித்யா எல்-1 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ அடுத்த என்ன திட்டங்களை வைத்துள்ளது? என்னமாதிரியான பணிகளை செய்து வருகிறது?
சோம்நாத்: பொதுவாக இஸ்ரோவின் பணிகளை பார்க்கையில், ஆப்ரேஷனல் சிஸ்டத்தை கையாண்டு வருகிறோம். தொழிநுட்ப செயற்கைகோள்களை வழிநடத்துதல், அரசின் கோரிக்கைக்கு ஏற்ப அடுத்தகட்ட செயற்கைகோள் செலுத்த தயாராகுதல் போன்றவை. ஒவ்வொரு திட்டமும் 1 -2 ஆண்டுகள் என சில காலம் பிடிக்கும். நிலவுக்கு போவதும், தரையிறங்குவதும் இவை எல்லாம் வெற்றி என நின்று விடக்கூடாது. எங்களுக்கும் நீண்டகால திட்டங்கள் உள்ளன.
நீங்கள் கேட்கலாம் நீண்ட கால திட்டங்கள் என்ன? சந்திரயான் 1, 2, 3 முடித்துவிட்டோம். மங்கள்யான் 1 முடித்துவிட்டோம். அஸ்ட்ரோசாட் முடித்துவிட்டோம். எக்ஸ்போசாட் விரைவில் செலுத்தவுள்ளோம். விண்ணிற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். மேலும், மறுபயன்பாட்டு ராக்கெட் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஒரு விண்வெளி ஆய்வகத்தையும் நிறுவ திட்டமிட்டு வருகிறோம். சந்திரயான் திட்டத்தையும், ககன்யான் திட்டத்தை இணைக்க முயன்று வருகிறோம். நிலவுக்கு மனிதனை அனுப்பிவைக்கவும் முடியாதா என்ன? அம்ரித்கால் 2047 ஆண்டிற்குள் இவை சாத்தியமாகும். தொடர்ச்சியான திட்டத்தின் மூலமே இவை உறுதியாக்கப்படும். நிலவுக்கு சென்ற விண்கலம் ஏன் மீண்டும் பூமிக்கு கொண்டுவர இயலாதா? இதை நான் என் குழுவிடமே கேட்டேன். குறைந்த காலத்தில் இதை எவ்வாறு செய்ய முடியும். வரும் காலத்தில் ஒரு ரோபோவை அனுப்பி நிலவில் இறக்கி தேவையான சாம்பிள்களை எடுத்துக்கொண்டு வந்து இங்கு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் இவை அனைத்தும் ஒருநாள் சாத்தியாமகும். இதில் சந்தேகம் இல்லை. அனைத்தும் இந்திய விண்வெளி ஏவுவாகனத்தில் மட்டுமே!
பார்ட்டனர்ஷிப் முக்கியம் தான். சந்திரயான்3-யில் பல்வேறு தேவைகளுக்கு பார்ட்னர்ஷிப் முறையில் செயலாற்றினோம். முதன்மை சிந்தனைகள் மற்றும் செயலாக்கம் அனைத்தும் இஸ்ரோ உடையது.
ராஜேஷ்: உலகமே கேட்கிறது, தாமதமானாலும் இந்தியா எப்படி சாதித்தது என்று?
சோம்நாத்: என்றுமே எங்கள் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுவது அனைத்தும் இந்தியாவில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ராக்கெட் மற்ற உதிரிபாகங்கள் அனைத்தும் பெரும்பாலும் இந்தியாவில் கிடைக்கப்பெறும் மெட்டல்களில் இருந்தே உருவாக்கப்படுகிறது. ஒரு சில பொருட்கள், அதாவது அலுமினியம் இறக்குமதி செய்ய வேண்டும். இந்தியாவில் கிடைக்கிறது. ஆனால் தரம், மற்றும் உறுதியின் அடிப்படையில் அதை இறக்குமதி செய்தே ஆகவேண்டும். உயர்மட்ட எலட்ரானிக் சாதனங்கள் இங்கு செய்யப்படுவது இல்லை. அதையும் வெளியிலிருந்துதான் வாங்க வேண்டியுள்ளது. இவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். விண்வெளித்துறையில் நாம் முன்னோடியாக வரவேண்டும் என்றால் உயர்மட்ட மெட்டிரீயல், உயர்மட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவற்றில் கவனம் செல்லு வேண்டும். இதன் மூலம் ஒரு வானியல் புரட்சி ஏற்படும்.
நன்றி,.... நன்றி
எங்களுக்காக ராக்கெட் சயின்ஸ் குறித்து தெளிவாக விளக்கியதற்கு மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி!