நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆதரவு தெரிவித்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றை அமல்படுத்திய பிறகே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலுக்கு வரும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், அதைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
undefined
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிலையில், நிதிஷ் குமார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டிலேயே எடுத்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது முதல் முறையாக தாமதமானது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 2024 வரை ஏன் காத்திருக்க வேண்டும்?” என நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த விரும்பினோம். ஆனால் மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, நாங்கள் சொந்தமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியிருந்தது.” எனவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
காளஹஸ்தி கோயிலில் ராகு கேது சிறப்பு பூஜை செய்த ஓபிஎஸ்: காரணம் என்ன?
சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் என கூறிய அவர், எஸ்சி, எஸ்டிகளைத் தவிர மற்ற சமூகக் குழுக்கள் கணக்கிடப்பட்டு அவர்களின் பொருளாதார நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார்.
பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய தகவல்களை எந்தவித இடையூறும் இன்றி பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார். சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் நலனுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க அரசுக்கு உதவும் எனவும் நிதிஷ் குமார் சுட்டிக்காட்டினார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ள முன்மொழிவுகளை நாட்டில் விரைவில் அமல்படுத்தினால் நல்லது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நான் எப்போதும் ஆதரித்து வருகிறேன். பெண்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை எங்கள் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.” என்றார்.
நாட்டிலேயே பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கிய முதல் மாநிலம் பீகார் என்று அவர் கூறினார். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு (இபிசி) உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் அப்போது வலியுறுத்தினார்.