இ-பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்கு இடையே பயணிக்கலாம்.. மத்திய அரசு அறிவிப்பு

By karthikeyan VFirst Published May 30, 2020, 7:39 PM IST
Highlights

மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் இல்லாமல் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. 
 

இந்தியாவில் நான்காம் கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைகிறது. கொரோனா கட்டுக்குள் வராத நிலையில், கொரோனாவுடன் வாழப்பழக வேண்டும் என்று மத்திய அரசு சார்பிலும் மருத்துவ நிபுணர்கள் சார்பிலும் ஏற்கனவே மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுவிட்டது. 

கொரோனா அச்சுறுத்தலுக்காக ஊரடங்கை தொடர்ந்து நீட்டிப்பது சாத்தியமல்ல. எனவே நான்காம் கட்ட ஊரடங்கிலேயே நிறைய தளர்வுகள் செய்யப்பட்டன. நான்காம் கட்ட ஊரடங்கும் நாளையுடன் முடிவடையும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. 

அதன்படி, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கோவில்கள், ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றை ஜூன் 8ம் தேதி முதல் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, 

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. பயணிகள் மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. இ-பாஸ் இல்லாமலேயே மாநிலங்களுக்கு இடையே பயணிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் மாநிலத்திற்குள் அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக பொதுமுடக்கம் வரும் காலங்களில் தளர்த்தப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இரண்டாம் கட்ட தளர்வுகளில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மூன்றாம் கட்ட தளர்வில், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறப்பது குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கூட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடைகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 

click me!