
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினம் வந்தால், “பட்ஜெட் தாக்கல் ஆகிவிட்டது… ஆனால் அதில் உண்மையில் என்ன இருக்கிறது?” என்ற குழப்பம் பொதுமக்களிடம் இயல்பாகவே எழும். டிவி விவாதங்கள், செய்தித் தலைப்புகள், சமூக வலைதள பதிவுகள் எல்லாம் ஒரே நேரத்தில் வெடிக்கும். ஆனால் உண்மையில் பட்ஜெட் என்பது மிகவும் சிக்கலான ஒன்றல்ல. அரசு தன் பண மேலாண்மை பற்றிய ஒரு தெளிவான கணக்கை மட்டும் நாட்டின் முன் வைக்கிறது.
அந்த கணக்கு இரண்டு அடிப்படை கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. ஒன்று, அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? மற்றொன்று, அந்தப் பணம் எதற்காக செலவிடப்படுகிறது? இதைத்தான் முழு பட்ஜெட் சுற்றி வருகிறது. இன்று (பிப்ரவரி 1-ஆம் தேதி), மோடி 3.0 அரசின் இரண்டாவது முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் உங்கள் சம்பளம், வரி, வேலை வாய்ப்பு, விலை உயர்வு, சேமிப்பு போன்ற விஷயங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் பொருளாதார சொற்கள்தான் பலரைக் குழப்புகின்றன. அதனால் அந்த சொற்களை எளிய தமிழில் புரிந்துகொள்வது அவசியம்.
வருவாய் பட்ஜெட் என்றால் என்ன?
வருவாய் பட்ஜெட் என்பது அரசின் அன்றாட வரவு மற்றும் அன்றாட செலவுகள். அரசு ஒவ்வொரு ஆண்டும் பெறும் பணமும், அதே ஆண்டில் செலவிடப்படும் பணமும் இதில் அடங்கும். அரசின் வருமானம் பெரும்பாலும் வருமான வரி, ஜிஎஸ்டி, நிறுவன வரி, கட்டணங்கள், அபராதங்கள் போன்ற வழிகளில் இருந்து வருகிறது.
மேலும், அரசு தினமும் செய்ய வேண்டிய செலவுகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள், மின்சாரம், தண்ணீர், அலுவலக நிர்வாகச் செலவுகள் போன்றவை இதன் முக்கிய பகுதிகள். எளிமையாகச் சொன்னால், வந்த பணம் உடனே செலவாகி முடிந்துவிடும் செலவுகளே வருவாய் பட்ஜெட்.
மூலதன பட்ஜெட் ஏன் முக்கியம்?
மூலதன பட்ஜெட் என்பது எதிர்கால வளர்ச்சியை மனதில் வைத்து தயாரிக்கப்படும் கணக்கு. இதில் அரசு இன்று செலவு செய்கிறது, ஆனால் அதன் பயன் பல ஆண்டுகளுக்கு கிடைக்கும். புதிய சாலைகள், ரயில் பாதைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், விமான நிலையங்கள் போன்ற சிறந்த எடுத்துக்காட்டுகள்.
மேலும், அரசு எவ்வளவு கடன் வாங்குகிறது, அந்தக் கடன் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது, எந்தத் துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதற்கான மூலதன பட்ஜெட் விளக்குகிறது. நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே அடித்தளம்.
ஜிடிபி ஏன் அனைவரும் பேசும் வார்த்தையாக உள்ளது?
ஜிடிபி என்பது ஒரு ஆண்டில் ஒரு நாடு மொத்தமாக உற்பத்தி செய்த பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு. விவசாயம், தொழிற்சாலைகள், சேவைத் துறை, வணிகம் என அனைத்தும் இதில் அடங்கும். ஜிடிபி வளர்ச்சி அதிகரித்தால், வேலை வாய்ப்புகள் உருவாகும், மக்களின் வருமானம் உயரும், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகும். அதனால் ஜிடிபி ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருவியாக பார்க்கப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை என்றால் பயப்பட வேண்டுமா?
அரசு பெறும் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்தால் உருவாகும் வருமான இடைவெளியே நிதி பற்றாக்குறை. இந்த வித்தியாசத்தை சமாளிக்க அரசு கடன் வாங்குகிறது. அளவுக்குள் இருந்தால் இது பிரச்சனை அல்ல. ஆனால் தொடர்ந்து அதிகரித்தால், கடன் சுமை உயரும், எதிர்காலத்தில் வரி சுமை அதிகரிக்கும் அபாயமும் உருவாகும்.
மூலதனச் செலவும் வருவாய் செலவும்
மூலதனச் செலவு என்பது நாட்டின் சொத்துக்களை அதிகரிக்கும் செலவு. இது வளர்ச்சியை வேகப்படுத்தும். அதே நேரத்தில், வருவாய் செலவு அரசை அன்றாடம் இயங்கச் செய்ய உதவும் செலவு. இது அவசியமானது தான், ஆனால் வளர்ச்சியை நேரடியாக உருவாக்காது. ஒரு நல்ல பட்ஜெட் என்றால், இந்த இரண்டிற்கும் சரியான சமநிலை இருக்க வேண்டும்.
வரிகள்: நேரடி மற்றும் மறைமுகம்
நேரடி வரி என்பது நீங்கள் நேரடியாக அரசுக்கு செலுத்தும் வரி. வருமான வரி, நிறுவன வரி இதற்கான எடுத்துக்காட்டுகள். இதை வேறு யார்மீதும் மாற்றி சுமத்த முடியாது. மறைமுக வரி என்பது விலையில் மறைந்திருக்கும் வரி. ஜிஎஸ்டி இதற்கு சிறந்த உதாரணம். நீங்கள் வாங்கும் பொருளின் விலையோடு சேர்த்தே இந்த வரி வசூலிக்கப்படுகிறது.
பணவீக்கம் சுமையா?
ஒரே வருமானத்தில் வாழும் மக்களுக்கு பணவீக்கம் அதிக சுமையாக இருக்கும். பொருட்களின் விலை உயரும்போது, மாதச் செலவுகள் அதிகரிக்கும், சேமிப்பு குறையும், EMI சுமையாகத் தோன்றும். அதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முக்கியப் பணியாகும்.
நிதிக் கொள்கை மற்றும் பணவியல் கொள்கை
நிதிக் கொள்கை என்பது அரசு வரி மற்றும் செலவுகள் மூலம் பொருளாதாரத்தை எப்படி நிர்வகிக்கிறது என்பதைக் காட்டுகிறது. பணவியல் கொள்கை என்பது வட்டி விகிதம், கடன் கிடைப்பது போன்ற விஷயங்களை ரிசர்வ் வங்கி எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதைக் குறிக்கிறது. இந்த இரண்டு கொள்கைகளும் சேர்ந்து நாட்டின் பொருளாதார திசையை நிர்ணயிக்கின்றன.