ஜி20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசும் புகைப்படம் வைரலாகி வருகிறது
டெல்லியில் இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த மாநாட்டின் முடிவில் அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட ஜி20 தலைவர்கள், உலக அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், விருந்தினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் வெறுங்காலுடன் இருக்கும் ரிஷி சுனக் முழங்காலிட்டுக் கொண்டே, நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஷேக் ஹசீனாவிடம் பேசுகிறார். ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இவர்தான் இந்தியாவின் பணக்கார யூ-டியூபர்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்த புகைப்படத்தை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரும் பலரும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பணிவை பாராட்டி வருகின்றனர். முன்னதாக, கிழக்கு டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்ற ரிஷி சுனக், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், தான் ஒரு பெருமைமிக்க இந்து எனவும், தனது இந்திய பயணத்தின் போது கோவிலுக்குச் செல்லவுள்ளதாகவும் ரிஷி சுனக் முன்பு கூறியிருந்தார்.
ஜி20 உச்சி மாநாட்டில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொண்டார். கடந்த 8ஆம் தேதி மாலை பிரதமர் மோடியுடன் அவர் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.