
மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே காணொலி வாயிலாக அமைச்சரவைக்கூட்டத்தை நடத்தி வருகிறார்.
மகாராஷ்டிராவில் குழப்பமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சியைச்ச சேர்ந்த 40எம்எல்ஏக்கள் மூத்த எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேவுடன் பாஜகவுக்கு ஆதரவாக சென்றுள்ளனர். தற்போது அனைத்து எம்எல்ஏக்களும் அசாமின் குவஹாட்டி நகரில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் ஆளும் மகாவிகாஸ்அகாதி கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சி கவிழுமா அல்லது கவிழ்க்கப்படுமா என்பது குறித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாராஷ்டிரா அரசியல் சூழலைக் கையாள மூத்த தலைவர் கமல் நாத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு நாட்களாக கமல்நாத் ஆலோசனை நடத்தி வரும்நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேவைச் சந்திக்கவில்லை.
இதுகுறித்து கமல்நாத்திடம் நிருபர்கள் இன்று கேட்டனர் அதற்கு அவர் “ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால அவரை நேரடியாகச் சந்திக்க முடியவில்லை. இதனால் காணொலி வாயிலாகவே பேசினேன். கூட்டணியை உடையாமல் இருக்க பேசி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எப்போதுமே முகக்கவசத்துடன் வரும் ஆளுநர்கோஷ்யாரியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கோஷ்யாரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் “ ஆளுநர் பிஎஸ் கோஷ்யாரிக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இயல்பான நிலையில் ஆளுநர் உள்ளார். ஆளுநர் பொறுப்பை கவனிக்க வேறு யாரையும் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆளுநரைசந்திக்க விரும்புவோர் காணொலி மூலம் சந்திக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது