பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் கண்டோன்மென்ட் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சியோனி இடையே பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள படாய் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளில் பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தீ பிடித்து எரிவதையும், விண்ணை முட்டும் புகை மூட்டத்தையும் காண முடிகிறது. இந்த விபத்தில் இரண்டு பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தீ இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
டெல்லியில் மோசமாக இருக்கும் காற்று தரக் குறியீடு!
ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்காவது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட பெட்டி உடனடியாக துண்டிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வே கூறுகையில், “ஆக்ரா-டோல்பூர் இடையேயான பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புகை வருவது குறித்து புகார் பெறப்பட்டது. இன்ஜினில் இருந்து 4ஆவது பெட்டியான ஜிஎஸ் கோச்சில் தீப்பிடிப்பது கண்டறியப்பட்டது. ரயில் நிறுத்தப்பட்டு, கோச் துண்டிக்கப்பட்டது. யாருக்கும் காயம் இல்லை.” என தெரிவித்துள்ளது.