மத்தியப்பிரதேச தேர்தலை முன்னிட்டு 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி மீண்டும் மாற்றியுள்ளது
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், மத்தியப்பிரதேச தேர்தலை முன்னிட்டு 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி மீண்டும் மாற்றியுள்ளது.
அதன்படி, மொரேனா மாவட்டத்தில் உள்ள சுமவாலி தொகுதி, நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள பிபரியா (பட்டியலிடப்பட்ட சாதி) தொகுதி, உஜ்ஜைன் மாவட்டத்தில் பட்நகர் தொகுதி மற்றும் ரத்லம் மாவட்டத்தில் உள்ள ஜாரா தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது.
புதிய திருத்தப்பட்ட பட்டியலின்படி, குல்தீப் சிகார்வாருக்குப் பதிலாக சுமவாலி தொகுதியில் அஜப் சிங் குஷ்வாஹாவும், பிபரியா தொகுதியில் குரு சரண் கரேவுக்குப் பதிலாக வீரேந்திர பெல்வன்ஷியும் போட்டியிடவுள்ளனர். இதேபோல், பட்நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கிக்கு பதிலாக முரளி மோர்வாலும், ஜாயோரா தொகுதியில் ஹிம்மத் ஸ்ரீமாலுக்குப் பதிலாக வீரேந்தர் சிங் சோலங்கியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி இதுவரை இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. முதற்கட்டத்தில் 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், இரண்டாம் கட்டத்தில் 85 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இரண்டாவது பட்டியலை வெளியிட்ட போது, அதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மூன்று பேரை காங்கிரஸ் கட்சி மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
துர்கா தேவி சிலை கரைப்பு: சிறுவர்கள் 9 பேர் தீக்காயம்!
மத்தியப்பிரதேச தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இரண்டு பட்டியலிலும், ஓபிசி வேட்பாளர்கள் 62 பேருக்கு வாய்ப்பளித்துள்ளது. அம்மாநில சட்டசபையில் 47 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும், 35 தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு தேர்தலில், 60 ஓபிசி வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்திருந்தது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டில் ஜோதிராதித்ய சிந்தியா, தனது ஆதரவு 22 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் சேர்ந்தார். இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.