துர்கா தேவி சிலை கரைப்பு நிகழ்வின் போது சிறுவர்கள் 9 பேர் தீ காயமடைந்துள்ளனர்
முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 9 நாள் திருவிழா தசரா அல்லது விஜயதசமியுடன் முடிவடைகிறது. அதன்படி, நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.
நவராத்திரி விழாவின்போது, துர்க்கைக்கு பந்தல் அமைத்து நாள்தோறும் பூஜைகள் செய்வது, வீட்டில் கொழு வைப்பது என நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் வெவ்வேறு வகையில் கொண்டாடப்படுகிறது. இறுதி நாளில் துர்க்கையின் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். எப்படி விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறதோ அதேபோல், துர்கையின் சிலைகள் கரைக்கப்படும்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் தசரா அன்று துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது ஜெனரேட்டரில் தீப்பிடித்ததில் சிறுவர்கள் 9 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். உடனடியாக, மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட அவர்களது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் விபத்து: சிறு காயங்களுடன் உயிர் தப்பிய முன்னாள் முதல்வர்!
பிரபல மலைப்பிரதேசமான மஹாபலேஷ்வரில் உள்ள கோலி ஆலி பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மஹாபலேஷ்வர் போலீசார் கூறுகையில், “துர்கா தேவி சிலையை கரைக்க எடுத்துச் செல்லும் வாகனத்தில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. அதன் அருகில் பெட்ரோல் கேன் இருந்ததால் ஜெனரேட்டர் சூடாகி தீப்பிடித்தது. இதனால், அலங்கரிக்கப்பட்ட அந்த வாகனத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஒன்பது சிறுவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் சதாரா மற்றும் புனேவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.” என தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து சிறுவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சமீர் ஷேக் தெரிவித்துள்ளார்.