
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இப்போது டெல்லி நாடாளுமன்றம் வரை சென்று பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்கள்.
ஆனால் இது அரசியல் விவகாரம் அல்ல; திருப்பரங்குன்றம் குறித்து விவாதிக்க முடியாது. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை ஏற்க முடியாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதேபோல் மாநிலங்களவையிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால் இது குறித்து விவாதிக்க வேண்டும் என இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு அவை மீண்டும் கூடியதும் திருப்பரங்குன்றம் விவாகரம் குறித்து திமுகவின் மக்களவை குழு தலைவரரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பேசினார்.
ஆர்எஸ்எஸ் நீதிபதி
அப்போது பேசிய அவர், ''திருப்பரங்குன்றம் நிலவரம் கவலை அளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் 100 ஆண்டுகளாக பாரம்பரிய வழக்கப்படி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது தர்கா அருகே தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டதுதான் பிரச்சனையாகி இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த தனி நீதிபதியின் உத்தரவால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சில மதவாத சக்திகள் அமைதியான தமிழ்நாட்டில் மதக் கலவரம் உருவாக்க நினைக்கின்றனர். நாட்டை ஆளும் கட்சியே மதக் கலவரத்தை உருவாக்குகிறது'' என்றார்.
டி.ஆர்.பாலு பேச்சுக்கு கண்டனம்
டி.ஆர்.பாலு தனது பேச்சின்போது தனி நீதிபதியை ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். இதனால் பாஜக எம்.பி.க்கள் பொங்கியெழுந்தனர். உடனே நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ எழுந்து நின்று, ''தனி நீதிபதியை ஒரு குறிப்பிட அமைப்புடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறு. நாட்டில் எந்த நீதிபதியையும் இப்படி பேசக்கூடாது'' என்று டி.ஆர்.பாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து டி.ஆர்.பாலுவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
திமுக மீது எல்.முருகன் குற்றச்சாட்டு
இதற்கிடையே டி.ஆர்.பாலு பேச்சுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்துக்களின் வழிபாட்டு முறையை திமுக தடுப்பதாக பரபரப்பு குற்றம்சாட்டினார். ''திருப்பரங்குன்றத்தில் தனி நீதிபதியின் உத்தரவை திமுக அரசும், காவல்துறையும் செயல்படுத்த மறுக்கிறது. குறிப்பிட்ட சமுதாயத்தை திருப்பதிபடுத்துவதற்காக வாக்கு வங்கி அரசியலுக்காக இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது'' என்று எல்.முருகன் தெரிவித்தார்.