
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் இப்போது நாடு முழுவதும் பேசுபொருளாகி விட்டது. சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இரண்டு முறை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்து விட்டது. நேற்று முன்தினம் மறுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று மதுரை காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதனால் மனுதாரர் ராம ரவிக்குமார், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து முன்னணியினர், பாஜகவினர் அங்கு சென்றபோது சட்ட ஒழுங்கு மற்றும் தமிழக அரசின் மேல்முறையீட்டை காரணம் காட்டி காவல்துறையினர் மலை மேலே செல்ல அனுமதி மறுத்து விட்டனர். மலை மேல் செல்ல முயன்ற நயினார் நாகேந்திரன், எச்.ராசா உள்பட இந்து முன்னணியினர், பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 'தனி நீதிபதியின் உத்தரவால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவதை விட்டு விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற கேட்பது தான் பிரச்சனை. புதிதாக தீபம் ஏற்றச்சொல்லும் இடத்தில் இருந்து 15 மீ அருகில் தான் தர்கா உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்' என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தகோடி திமுக எம்.பி.க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.