எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!

Published : Dec 04, 2025, 10:26 PM IST
Putin and Modi

சுருக்கம்

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அமெரிக்கா உட்பட எந்த நாட்டையும் இலக்காகக் கொண்டதல்ல என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். டிரம்பின் சுங்கவரிக் கொள்கை, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்துப் பேசியுள்ளார்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு, அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டையும் இலக்காகக் கொண்டதல்ல என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் மற்றும் இதற்கு அமெரிக்கா காட்டும் எதிர்வினைகள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது இதனைக் கூறினார்.

இந்தியா வருவதற்கு முன்னதாக, கிரெம்ளினில் ஆஜ் தக் மற்றும் இந்தியா டுடே செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் சுங்கவரிக் கொள்கை

இந்தியாவையும் பாதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சுங்கவரிக் கொள்கைகளை இந்தியா மற்றும் ரஷ்யா எவ்வாறு கையாள வேண்டும் என்று புடினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், "டிரம்ப் தனது சொந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறார். அவருக்கு ஆலோசகர்கள் உள்ளனர் – அவரது முடிவுகள் சும்மா எடுக்கப்படுவதில்லை. வர்த்தகப் பங்காளிகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பது போன்ற சுங்கவரிக் கொள்கைகளை அமல்படுத்துவது இறுதியில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்று அவரது ஆலோசகர்கள் நம்புகிறார்கள். அவர் நல்லெண்ணத்துடன்தான் செயல்படுகிறார் என்று நான் கருதுகிறேன்," என்றார்.

ஆனால் ரஷ்யா அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று குறிப்பிட்ட புடின், "இதில் அபாயங்கள் இருப்பதாக எங்கள் நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனாலும், எந்தப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்வது என்பதைத் தீர்மானிப்பது ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் எடுக்கும் முடிவு. நாங்கள் இதுபோன்ற நடைமுறைகளில் ஒருபோதும் ஈடுபடவில்லை. எதிர்காலத்திலும் ஈடுபட உத்தேசம் இல்லை. எங்கள் பொருளாதாரக் கொள்கை வெளிப்படையானது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) அனைத்து விதிமீறல்களும் முடிவில் சரிசெய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறினார்.

"யாருக்கும் எதிரானது அல்ல"

'மேக் இன் இந்தியா, மேக் வித் ரஷ்யா' போன்ற இந்தியா-ரஷ்யாவின் கூட்டு முயற்சிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்று கேட்கப்பட்டபோது, புடின் தங்கள் உறவு எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று வலியுறுத்தினார்.

"நானும் பிரதமர் மோடியும் ஒருபோதும் யாருக்கும் எதிராகச் செயல்பட வேண்டும் என்ற அணுகுமுறையுடன் எதையும் அணுகியதில்லை. அதிபர் டிரம்புக்கு அவரது சொந்த இலக்குகள் உள்ளன. அதேசமயம், நாங்கள் எங்கள் நலன்களில் கவனம் செலுத்துகிறோம் – யாருக்கும் எதிராக அல்ல. நாங்கள் இந்தியா மற்றும் ரஷ்யாவின் நலன்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் நடவடிக்கைகளில், நாங்கள் யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. இதை மற்ற நாடுகளின் தலைவர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று புடின் கூறினார்.

இந்தியா ரஷ்ய எண்ணெய் வர்த்தகம்

ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவது 'போருக்கு நிதி அளிக்கும் செயல்' என்று டிரம்ப் சமீபத்தில் தெரிவித்த கருத்து குறித்து கருத்து தெரிவித்த புடின், அமெரிக்க அதிபரைப் பற்றி எந்த ஒரு தனிப்பட்ட கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

"சக தலைவர்களைப் பற்றி நான் ஒருபோதும் தனிப்பட்ட முறையில் விமர்சம் செய்வதில்லை. தேர்தலில் வாக்களிக்கும் குடிமக்கள்தான் இந்த மதிப்பீடுகளைச் செய்ய வேண்டும்," என்றார்.

இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி குறித்த டிரம்பின் விமர்சனத்திற்கு பதிலளித்த புடின், அமெரிக்காவே இப்போதும் ரஷ்ய அணுசக்திப் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

"அமெரிக்காவே இன்றும் அதன் அணுமின் நிலையங்களுக்கான அணுசக்தி எரிபொருளை எங்களிடமிருந்து வாங்குகிறது. அதுவும் எரிபொருள் தான் – அமெரிக்காவில் செயல்படும் அணு உலைகளுக்கான யுரேனியத்தை ரஷ்யாவில் இருந்து வாங்குகிறார்கள். அமெரிக்காவுக்கு எங்கள் எரிபொருளை வாங்க உரிமை இருந்தால், அதே சலுகையை இந்தியாவுக்கு ஏன் வழங்கக்கூடாது? இது குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று புடின் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!
நண்பேன்டா.. ரஷ்ய அதிபர் புடினை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!