
குஜராத்தின் வல்சாத் பகுதியில், மின்சாரம் தாக்கியதால் சுயநினைவை இழந்த ஒரு பாம்புக்கு, வனவிலங்கு மீட்பாளர் ஒருவர் வாயோடு வாய் வைத்து சுவாசம் (CPR) அளித்து வெற்றிகரமாக உயிரை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறைதேடிச் சென்ற இந்திய எலிப் பாம்பு (Indian Rat Snake) ஒன்று, அங்குள்ள ஒரு மின்சார கம்பியில் ஏறியபோது மின்சாரம் தாக்கி, சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அசைவற்று கிடந்தது.
உள்ளூர் மக்கள் வனவிலங்கு மீட்பாளரான முகேஷ் வயாட் என்பவரைத் தொடர்பு கொண்டனர். ஒரு தசாப்த காலமாக அனுபவம் கொண்டவரும், உள்ளூர் பாம்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவருமான முகேஷ், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பைப் பரிசோதித்தார்.
பாம்பு அசைவின்றி, எவ்வித அசைவும் இல்லாமல் கிடந்ததைக் கண்ட அவர், பாம்புக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்தார். மேலும், அதன் இதயப் பகுதியில் இடைவெளிவிட்டு லேசாகத் தட்டி, சுமார் 30 நிமிடங்கள் விடாமுயற்சியுடன் சிபிஆர் (CPR) சிகிச்சையை அளித்தார்.
அரை மணி நேரத் தொடர் முயற்சிக்குப் பிறகு, அந்தப் பாம்பு மெல்ல மெல்ல சுவாசிக்கத் தொடங்கி, அசைவுகளைக் காட்ட ஆரம்பித்தது. முழுமையாக குணமடைந்த பிறகு, அது அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
இந்த வியத்தகு மீட்பு நடவடிக்கையின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் முகேஷிற் இரக்க மனப்பான்மையைப் பாராட்டி வருகின்றனர்.
எலிப் பாம்பு (Ptyas mucosa) என்பது இந்தியாவிலும் தென் ஆசியாவின் பிற பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு விஷமற்ற பாம்பு இனமாகும்.
இது வேகமாக நகரக்கூடிய சுறுசுறுப்பான உயிரினமாகும். அதன் அளவு மற்றும் வேகம் காரணமாக, இது பெரும்பாலும் நாகப்பாம்பு (Cobra) என்று தவறாகக் கருதப்படுவதுண்டு.
இது மனிதர்களுக்கு ஆபத்தில்லாததுடன், விவசாய நிலங்கள் மற்றும் மனித குடியிருப்புகளில் எலிகள் போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நன்மை பயக்கும் உயிரினமாகும்.