2027-ம் ஆண்டுக்குள் இந்த கார்களுக்கு முழுமையான தடை? மத்திய அரசு முக்கிய முடிவு

By Ramya sFirst Published May 8, 2023, 6:15 PM IST
Highlights

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், 2027-ம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் கார்களை முழுமையாக தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களில் பல இந்திய நகரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களின் வருடாந்திர பட்டியலில் 39 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சூழலில், டீசலில் இயங்கும் கார்களுக்கு முழுமையான தடை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலிய அமைச்சகத்தின் எரிசக்தி மாற்ற ஆலோசனைக் குழு, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அனைத்து நகரங்களிலும் டீசலில் இயங்கும் 4 சக்கர வாகனங்கள் படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2035 ஆம் ஆண்டிற்குள் தேசிய எரிசக்தியில், கிரிட் சக்தியின் பங்கை 40 சதவீதமாக இரட்டிப்பாக்க எரிசக்தி மாற்ற ஆலோசனைக் குழு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை ஆகியவற்றைக் கண்காணிக்கும் உயர் அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழுவை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பு அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைத்து பசுமை மாற்று எரிபொருளை நோக்கி மாற்றத்தை எளிதாக்கும் என்று எரிசக்தி மாற்றக்குழு நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒரு விமான டிக்கெட் 25 ஆயிரம்.. மணிப்பூரை விட்டு வெளியேறும் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த விமான நிறுவனங்கள்

எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை நோக்கியே இருக்கும் என்று கூறப்படும் நிலையில், 2024 ஆம் ஆண்டு வரை டெலிவரி வாகனங்களின் புதிய பதிவுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற 75 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலர் தருண் கபூர் உள்ளார். அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் ஒரு எண்ணெய் அமைச்சக அதிகாரி குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். முன்னாள் ஓஎன்ஜிசி தலைவர் சுபாஷ் குமாரும் இந்த குழுவில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

சமீபத்திய உலக காற்றுத் தர அறிக்கையில், கடந்த ஆண்டு உலகின் எட்டாவது மிகவும் மாசுபட்ட நாடாக இந்தியா இருந்தது. அதாவது உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான வரம்பை விட  இந்தியாவில் காற்று மாசுபாடு 10 மடங்கு அதிகமாகும். நாட்டில் மோசமான காற்று மாசுபாட்டை சமாளிக்க பயோ-சிஎன்ஜி மெத்தனால், மின்சாரம், பயோ-டீசல், எல்என்ஜி, எச்-சிஎன்ஜி மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் போன்ற சுத்தமான மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பல ஆண்டுகளாக தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த நபர்.. X-Ray ஸ்கேனை பாரத்து அதிர்ந்து போன மருத்துவர்கள்..

click me!