திருப்பதி பக்தர்களிடம் தொடர் வழிப்பறி - 4 பேர் கைது ; 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

First Published Jun 26, 2017, 8:44 PM IST
Highlights
Tirupathi devotees 4 persons arrested and seized 1.5 kg gold jewelery


திருப்பதியில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து,  அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பதி பகுதியில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஒரு கும்பல் நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்து வருவதாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் வந்தன.

இந்த புகார்களின் பேரில், திருச்சானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேந்தர் நாயுடு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ஷேக் அப்துல் கதிர், முஸ்லிம், சாதிக் கம்பார், ஹரிபாபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து, திருப்பதி காவல் மாவட்ட எஸ்.பி ஜெயலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கைது செய்யப்பட்டவர்கள் மீது  திருச்சானூர், திருப்பதி, எம்.ஆர். பள்ளி, அலிபிரி உள்ளிட்ட 11 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் 1661 கிராம் தங்க ஆபரணங்கள் திருடப்பட்ட புகார் அளிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்து 1622 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்ததாகவும், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட  1 மோட்டார் பைக், 1 கார்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இவர்களின் கூட்டாளிகளான அப்பாஸ் இராணி, நம்தர், தப்ரீஷ் இராணி, கசாலி ( எ) அப்பாஸ், ஹெசு ஆகியோர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை போலீசார் தேடி வருவருவதாகவும் எஸ்.பி. ஜெயலட்சுமி தெரிவித்தார்.

click me!