
மஹாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவை மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து விளக்கமளித்தார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் கடும் சோகத்தில் திளைத்திருந்தனர். மராத்வாடா பகுதியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 426 விவசாயிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதனால், மாநில அரசானது வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிகளில் பெற்றுள்ள விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைதொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும், ரூ.34,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
ரூ.1.5 லட்சம் வரை விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும், விவசாய கடன் தள்ளுபடிக்காக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மஹாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவை மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து விளக்கமளித்துள்ளார்.