திருமலை திருப்பதியில் தண்ணீர் பஞ்சம்! இன்னும் 120 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் உண்டு!

By Dinesh TG  |  First Published Aug 25, 2024, 10:38 AM IST

திருமலையில் பருவமழை பொய்த்ததால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அணைகளில் சில மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால், திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களிடம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 


திருமலை திருப்பதியில் நடப்பாண்டில் சராசரியை விட குறைவான பருவமழையால் திருப்பதி கோயிலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. திருப்பதியை ஒட்டி அணைகளில் 120-130 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் தண்ணீர் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

பாவநாசனம் அணை, ஆகாச கங்கை, கோகர்பம், குமாரதாரா-பசுபுதாரா மற்றும் கல்யாணி அணைகளை மட்டுமே திருமலை நம்பியுள்ளது. திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு தினமும் 70,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். தினசரி சுமார் 43 லட்சம் கேலன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த அணைகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவது திருப்பதி அறங்காவலர் குழுவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால், திருப்பதி பகுதியில் மட்டும் மழை பற்றாக்குறை நிலவுகிறது. TTD தகவல்படி, திருமலையைச் சுற்றியுள்ள 5 அணைகளின் மொத்த கொள்ளளவு 14,304 லட்சம் கேலன். ஆனால், தற்போது 5,800 லட்சம் கேலன் மட்டுமே உள்ளது. இந்த நீர் இருப்பு அடுத்த 120-130 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இனியும் மழை பெய்யவில்லை என்றால் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளது.

திருப்பதி கோயிலுக்கு போறீங்கா.! இப்படி மட்டும் ஏமாந்துவிடாதீங்க- முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேவஸ்தானம்

எனவே, தினமும் இங்கு வரும் பக்தர்கள் மற்றும் வரவிருக்கும் கிருஷ்ண ஜெயந்தி, தசரா, தீபாவளி, பிரம்மோற்சவம் போன்ற பல்வேறு பண்டிகைகளின் போது இங்கு வரும் லட்சக்கணக்கான மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் விநியோகம் குறைக்கப்படலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயிலில் தினமும் ஏதாவது ஒரு சடங்கு நடைபெறும். ஆண்டுக்கு மொத்தம் 450 பண்டிகைகள் கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

Tap to resize

Latest Videos

click me!