திருப்பதி கோயிலுக்கு போறீங்கா.! இப்படி மட்டும் ஏமாந்துவிடாதீங்க- முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேவஸ்தானம்
திருப்பதி கோயிலுக்கு தரிசன டிக்கெட்டுகள் எனக்கூறி போலியான டிக்கெட்டுகளை வழங்கும் மோசடி கும்பல் அதிகரித்து வருவதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது மற்றும் பக்தர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்துகிறது.
திருப்பதியில் குவியும் பக்தர்கள்
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமில்லை சாதாரண நாட்களிலும் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மேலும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
தரிசன டிக்கெட் முறைகேடு
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் திருப்பதி கோயிலுக்கு செல்ல தரிசன டிக்கெட் எனக்கூறி போலியான டிக்கெட் கொடுத்து ஏமாற்றப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது. தனியார் நெட் செண்டர் மையங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறப்பட்டது.
இடைத்தரகர்களை நம்பாதீங்க
இதனையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இணையதள மையத்தின் உரிமையாளர் மீது திருப்பதி தேவஸ்தானம் சார்பாக புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இடைத்தரகர்களை நாடுவதன் மூலம் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை இழக்க வேண்டாம். திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளிப்படையாகச் செயல்பட்டு வருவதாகவும்,
தேவஸ்தானம் எச்சரிக்கை
எனவே தரிசனத்திற்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாறவும், சிரமமும் பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பெறும் டிக்கெட்டுகள் தரிசனத்துக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களால் பரிசோதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அப்போது பக்தர்கள் கொண்டுவந்துள்ள டிக்கெட் போலியானது என தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பக்தர்கள தேவையில்லாத சிரமத்தை சந்திக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது.
Tirupati
மேலும் திருப்பதி கோயில் சாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வழங்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள தேவஸ்தானம், திருப்பதி வெங்கடேஸ்வரசாமி பக்தர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் https://ttdevasthanams.ap.gov.in என்ற முகவரியில் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை எண், முகவரி ஆகியவற்றைக்கொடுத்து தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.