போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று நேற்று வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி பெண்ணான ஜாரா படேல் என்பவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோவில் அவரது முகத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கியிருந்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், போலி வீடியோக்கள் தொடர்பான கவலைகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னம்: மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
போலி வீடியோக்கள் தொடர்பாக, ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்களை நினைவூட்டி, சமூக ஊடக தளங்களுக்கு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் மோசடி செய்ததற்கான தண்டனை வழங்கும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 66Dஐ அரசாங்கம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, எந்தவொரு தகவல் தொடர்பு சாதனம் அல்லது கணினி மூலம் தனிப்பட்ட முறையில் மோசடி செய்தாலும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டயுடன், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது அச்சம் ஏற்படுவதாக ராஷ்மிகா மந்தானா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் தமது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறிய அவர், இதுவே தனது பள்ளி கல்லூரி காலங்களாக இருந்திருந்தால் எப்படி சமாளித்திருப்பேன் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.