
ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி திருமண உறவை முறிக்க தடை கோரும் விதத்தில் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இஸ்லாமியர்கள் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் 3 முறை ‘தலாக்’ கூறினால் போதும். அவர்களுக்குள் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம். இந்த வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.
இதை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முத்தலாக் நடைமுறை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, வருகிற குளிர்கால கூட்டத்தொடரில், ‘முத்தலாக்’குக்கு தடை விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்நிலையில், இஸ்லாமியர்கள் விவாகரத்து பெற பயன்படுத்தும் முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ள சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
இந்த மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைதொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் குரல்களை நிராகரித்து மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.