
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஹிமாசலப் பிரதேசத்துக்கு முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவுக்காகச் சென்றிருந்தார். விழா முடிந்த பின்னர், காரில் திரும்பிக் கொண்டிருந்தவர், திடீரென காரை நிறுத்தச் சொல்லி, தமக்கு முன்னர் பழக்கமாயிருந்த ரோட்டோர காப்பிக் கடையில் இருந்து காபி வாங்கி பொதுமக்களுடன் நின்று குடித்தார். அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனராம்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்க கோவா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, கோவாவில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தபடி, செல்ஃபி எடுத்துக் கொண்டனர் பொதுமக்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை கடந்த 19 ஆண்டுகளாக வகித்து வந்த சோனியா, தனது மகன் ராகுல் காந்தியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்த பின், ஓய்வு எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தீவிர அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வாக நேரத்தைக் கழிக்கும் வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை கோவாவில் கழிக்கச் சென்றார். சோனியா இவ்வாறு விடுமுறைக் காலங்களை வெளியூர்களில் கழித்ததில்லை என்பதால், இது அவருக்கு நன்றாகவே அமைந்தது.
கிறிஸ்துமஸ் கழிந்த மறுநாள், நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த சோனியா, அங்கே கடற்கரையோரமாக சைக்கிளில் வலம் வந்தார். திடீரென கடற்கரையோரம் சைக்கிள் ஓட்டியபடி வந்த சோனியாவை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உரிமையோடு நிறுத்தி சோனியாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சோனியாவுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்கள் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகின்றன.
சோனியாவுடன் அவரது மகள் பிரியங்காவும் கோவாவில் இருந்து வருகிறார். புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு, ஜனவரி முதல் வாரம் அவர் புது தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.