முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு - நீதிமன்றம் எச்சரிக்கை!

By Manikanda Prabu  |  First Published Jan 24, 2024, 1:43 PM IST

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வருகிற 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின்  சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

Tap to resize

Latest Videos

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ராம பக்தர்கள் அனுப்பும் உணவுப் பொருட்களால் நிரம்பி வழியும் சேமிப்பு கிடங்கு!

இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜனவரி 29ஆம் தேதி கண்டிப்பாகநேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டு சிறையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செயத மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், வருகிற 29ஆம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி, அவர் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரது தரப்பு வாதத்தை முன்வைக்க இதுவே கடைசி வாய்ப்பு எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும்வரை, விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடை கோரப்பட்டிருந்தது. ஆனால், வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில், ராஜேஷ் தாஸின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதன்படி, ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், அவரது தரப்பு வாதத்தை முன்வைக்க கடைசி வாய்ப்பாக வருகிற 29ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!