உத்தரகாண்டில் திருவள்ளுவர் சிலை மீண்டும் திறப்பு

First Published Dec 20, 2016, 12:39 PM IST
Highlights


ஹரித்துவாரில் உள்ள மேளா பவன் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வள்ளுவர் சிலையை மாநில முதல்வர் ஹரிஸ் ராவத் நேற்று திறந்து வைத்தார்.

பா.ஜ.க, எம்.பி. தருண் விஜய், தமிழகத்தில் தயாரான 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை, உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கைக்கரை ஓரம் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி நிறுவினார். இதற்காக கன்னியாகுமரியில் இருந்து  திருவள்ளுவர் சிலை கடந்த ஜூன் மாதம் ரயில் மூலம் ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது.

அங்குள்ள சில மதவாத அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டுக் கிடந்தது. தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள், இதை திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமாக கருதி, இந்தச் சம்பவத்தைக் கண்டித்து குரல் எழுப்பின.

இதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத், 'திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் அமைக்கப்படும்' என உறுதி அளித்தார். இதற்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்பட பலரும் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தனர். திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் திருவள்ளுவர் சிலை மீண்டும் நேற்று மாலை நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சி அரசு விழாவாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

click me!