ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு ரூ.8.20 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களும், செயலிகளும் கடந்த சில ஆண்டுகளாக பன்மடங்கு வளர்ந்துள்ளன இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் அறிமுகம் ஆயின. அதற்கு பிறகு, தற்போது வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் சட்டம் இருந்தாலும், இதன் வலையமைப்பு, இந்த நிறுவனங்களின் தொடர்புகள், கண்காணிக்க தனி அமைப்பு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதனை ஒடுக்குவது அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு ரூ..8.20 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. திங்க் சேஞ்ச் ஃபோரம் (TCF) அறிக்கையின்படி, இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர்பான சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் வருடத்திற்கு ரூ.8,20,000 கோடி (100 பில்லியன் டாலர்) வருமானத்துடன் குறிப்பிடத்தக்க வரி இழப்பையும் ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் 140 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை ஐபிஎல்லின் போது 370 மில்லியனாக இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்திய பயனர்களை கவரும் வகையில், பிரபல பாலிவுட் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் ஈடுபடுத்துகின்றன.
சூதாட்ட சட்டம்
பொது சூதாட்டச் சட்டம் 1867, சூதாட்டச் சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் சூதாட்டத்தை நிர்வகிக்கும் பொதுச் சட்டமாகும். இருப்பினும், அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் கீழ் சூதாட்டம் வருகிறது. இதன் பொருள், தங்கள் பிரதேசத்தில் சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மாநிலத்திற்கு மட்டுமே உரிமை உண்டு. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிரா, தமிழகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களை சட்டவிரோதம் என சொல்லும் சட்டங்கள் உள்ளன.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
பொது சூதாட்டச் சட்டம், பணம் போடுவது அல்லது பணத்திற்காக பந்தயம் கட்டுவது அல்லது அதற்கு சமமான வேறு எந்தச் செயலையும் உள்ளடக்கிய எந்த சூதாட்டமும் சட்டவிரோதமானது என்று கூறுகிறது. ஆனால், திறமை தேவைப்படும் விளையாட்டுகள் இந்த விதிக்கு விலக்காக உள்ளது. அவை, இந்தியாவில் சட்டபூர்வமானவை.
அறிக்கை எழுப்பும் கவலைகள்
ஹவாலா, கிரிப்டோகரன்சிகள் மற்றும் பிற சட்டவிரோத பரிமாற்றங்கள் மூலம் நிதி திரட்டப்படுவதால், நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக ஆன்லைன் சூதாட்டம் உள்ளது. இந்த திசைதிருப்பப்பட்ட நிதிகள் மூலம் சட்டவிரோத செயல்களுக்கு நிதியளிக்கலாம். அது பொது ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் கேள்விக்கு உட்படுத்தும். சுய-ஒழுங்குமுறை அமைப்புகளை உருவாக்குவதில் தாமதம் செய்வது சட்டவிரோத சூதாட்ட தளங்கள் வளர வழிவகுக்கும்.
பரிந்துரைகள்
ஒரு பணிக்குழுவை நிறுவுவதன் மூலம் புதிய ஜிஎஸ்டி அமைப்பை கடுமையாக அமல்படுத்துதல். சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளை கண்காணித்தல். சட்டப்பூர்வ கேமிங் பிளாட்ஃபார்ம்களில் இருந்து சட்டவிரோதமாக நிதி வெளியேறுவதைப் பாதுகாக்க, இந்தியாவில் பதிவு செய்யுமாறு ஆபரேட்டர்களை கட்டாயப்படுத்துதல் போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் முடிவு செய்தது. இதற்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதனை அரசு மறு பரிசீலனை செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் புயலை கிளப்பிய மகாதேவ் ஆப்
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், அவரது நண்பர் ரவி உப்பால் ஆகியோர் மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருகிறது. சவுரப் சந்திரகர் இந்தியாவில் இருந்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு தனது நண்பர் ரவி உப்பாலுடன் துபாய் சென்று, அங்கு கடை நடத்திக்கொண்டே சூதாட்ட செயலியை உருவாக்கி அங்கேயே பதிவு செய்து, இந்தியாவில் அதனை அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.
வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான இந்த செயலியில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.417 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.5,000 கோடி அளவுக்கு பணமோசடி நடந்திருப்பதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் ரூ.200 கோடி செலவு செய்து சவுரப் சந்திரகர் தனது திருமணத்தை நடத்தியுள்ளார். இதில், பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பெரிய அரசியல்வாதிகள் முதல் உயர் அதிகாரிகள், உள்ளூர் போலீஸ்காரர்கள் வரை பலருக்கும் இந்த விவகாரத்தில் பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், தலைமறைவாக இருக்கும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹீமின் ‘டி’ கம்பெனியின் தொடர்புகள், ஹவாலா ஆப்பரேட்டர்கள், போலி நிறுவனங்கள், மத்திய கிழக்கு, தாய்லாந்து தொடர்புகள் என சர்வதேச நெட்வொர்க் வரை இந்த முறைகேடு நீள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாதேவ் செயலி, சட்டவிரோதமாக நாடு முழுவதும் இயங்கும் குறைந்தது 10 சூதாட்ட செயலிகளை கைப்பற்றியது. மஹாதேவ் சூதாட்ட சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தவைகளில், லோட்டஸ் 365, ரெட்டிஅன்னா மற்றும் பல அடங்கும்.
சீனா மற்றும் பிற பிரச்சனைக்குரிய வெளிநாட்டு இடங்களில் இருந்து செயல்படும் சுமார் 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகளை உள்துறை அமைச்சகம், கடந்த பிப்ரவரியில் கட்டுப்படுத்தியது. லோட்டஸ் 365 போன்றவை வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டவை. அது, இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த செயலிகளுக்கான விளம்பரங்களை இன்றும் சமூக வலைதளங்களில் காணலாம்.
இதுகுறித்து மகாதேவ் செயலி விசாரணையில் ஈடுபட்டுள்ள மூத்த அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “விளம்பரத்தில் காணப்படும் வாட்ஸ் அப் எண்ணை க்ளிக் செய்ததும், பந்தயம் கட்ட ஆர்வமுள்ள நபரை Paytm அல்லது G Pay பக்கத்துக்கு அழைத்து செல்லும். அவர்கள் பணம் செலுத்தியதும், செயலியை கட்டுப்படுத்தும் குழு உறுப்பினர்கள், தங்களது கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு, ஹவாலா அக்கவுண்ட்டுகள் அல்லது ஷெல் அக்கவுண்டுகளுக்கு பணத்தை அனுப்பி விடுவர். பின்னர், வேறு ஒரு செயல்முறை மூலம், பணம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.