என் மனைவியையே விமர்சிக்கிறார்கள்.. இனி முதல்வராகத்தான் பேரவைக்குள் நுழைவேன்.. கதறி அழுத சந்திரபாபு நாயுடு..!

By Asianet TamilFirst Published Nov 19, 2021, 9:17 PM IST
Highlights

கடந்த இரு ஆண்டுகளாக ஆளும் கட்சியினரால் நான் அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். என்றாலும் நான் பொறுமையுடன்தான் இருந்தேன்.

இனி மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டேன் என்று கூறியதோடு செய்தியாளர்கள் சந்திப்பில் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஆந்திராவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் தோல்வியடைந்தது. பெரும் வெற்றியைப் பெற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராகப் பதவியேற்றார். அப்போது முதலே அதிரடியான நடவடிக்கைகளை ஜெகன் மோகன் எடுத்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு தேசத்தை குறி வைத்து பல நடவடிக்கைகளை எடுத்தார். இதனால், மாநில அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டியும் - சந்திரபாபு நாயுடுவும் எலியும் பூனையுமாகவே இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அம்மாநில சட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியையும் அக்கட்சியின் தலைவர்களையும் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆவேசமடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டனர். இரு தரப்புக்கும் சட்டப்பேரவையில் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை சொல்லி மோதிக்கொண்டனர்.  இதனால் பொறுமையிழந்து கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, “இனி மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டேன்” என்று ஆவேசமாகக் கூறிவிட்டு சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

இதன் பிறகு சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த இரு ஆண்டுகளாக ஆளும் கட்சியினரால் நான் அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். என்றாலும் நான் பொறுமையுடன்தான் இருந்தேன். இன்று அவர்கள் என் மனைவியை விமர்சிக்கிறார்கள். நான் எனது வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இனியும் என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கூறியபோது உணர்ச்சிசப்பட்டு கதறி அழுதார். சந்திரபாபு நாயுடுவின் இந்தக் கதறல் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. சந்திரபாபு நாயுடு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு கதறி அழுத சம்பவம் அந்த மாநில அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!