#BREAKING ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தொல்லை இல்லை.. மும்பை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Nov 18, 2021, 11:50 AM IST
Highlights

சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி அழுத்தினாரா, ஆடைக்குள் கை விட்டு மார்பகங்களை அழுத்தினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது. இது தவறான செயல்தான். ஆனால், சட்டப்படி, இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின்கீழ்தான் வரும். 

சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சதீஷ் ரக்டே(39) இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 12 வயது சிறுமியை கொய்யாப்பழம் தருவதாக தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தன் வீட்டுக்குச் சென்றதும் சிறுமியின் மார்பை ஆடையுடன் சேர்த்து அழுத்தியதுடன் சிறுமியின் ஆடையையும் அவிழ்க்க முயன்றுள்ளார். சிறுமி அழ ஆரம்பித்ததால், சிறுமியை வீட்டுக்குள் விட்டு கதவைச் சாத்திவிட்டு அங்கிருந்து சதீஷ் தப்பியோடிவிட்டார்.

அழுகைச் சத்தம் கேட்டு அங்கே விரைந்து வந்த சிறுமியின் தாய் சிறுமியை மீட்டிருக்கிறார். இதையடுத்து, சதீஷ் ரக்டே மீது நாக்பூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஐபிசி 354, 363, 342 ஆகிய பிரிவுகளின் கீழும் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிபதி, குற்றவாளி மீதான போக்சோ சட்டத்தை உறுதி செய்து குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி சதீஷ், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கியுள்ள தீர்ப்புதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி அழுத்தினாரா, ஆடைக்குள் கை விட்டு மார்பகங்களை அழுத்தினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது. இது தவறான செயல்தான். ஆனால், சட்டப்படி, இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின்கீழ்தான் வரும். தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்தான் பாலியல் தாக்குதல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளி கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை என்பதால், பாலியல் தாக்குதல் எனக் கூற முடியாது.” என்று கூறியுள்ள நீதிபதி புஷ்பா கனேடிவாலா போக்ஸோ சட்டத்தின் 8-வது பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்து, ஐபிசி 354-ன் கீழ் அவருக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இப்போது, இந்த நீதிபதியின் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில் தொடுதல் என்ற சொல் பாலியல் தொடர்பை குறிக்கும். அது ஆடைக்கு மேல் இருந்தாலும் பாலியல் சீண்டல்தான், போக்சோ சட்டத்துக்குள்தான் வரும். குற்றவாளியை சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிக்க அனுமதிக்க கூடாது என்பதே சட்டத்தின் நோக்கம். நாக்பூர் நீதிமன்ற தீர்ப்பு விதிகளின் அபத்தமான விளக்கத்திற்கு வழிவகுக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

click me!