
பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் வழங்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
வங்கி கணக்கு, அரசு மானியங்கள், லைசென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முக்கிய ஆவணங்கள் பெறுவதற்கு ஆதார் முக்கியம் என்பதால், ஆதார் அட்டை எடுத்துக்கொள்வது அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை சுமார் 115 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், ஆதார் அட்டை வழங்கும் பணியில் தெலங்கானா அரசு மும்முரம் காட்டி வருகிறது. மாவட்ட தலைநகரங்கள், தாலுகாக்களில் நிரந்தர ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதார் எடுப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் குழந்தை பிறந்து சில மணி நேரத்துக்கு பின் குழந்தையின் புகைப்படம் எடுக்கப்படுகிறது.
இதனுடன் பெற்றோரின் புகைப்படங்கள், கைரேகை ஆகியவையும் சேர்த்து குழந்தைக்கு ஆதார் பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் ஆதார் அட்டையும் வழங்கப்படுகிறது.
இந்த அட்டையை 5 வயது வரை பயன்படுத்தலாம். பின்னர், பழைய அட்டையை ஆதார் மையங்களில் கொடுத்து, குழந்தையின் பெயர், கைரேகையை பதிவு செய்து புதிய அட்டையை வாங்கிக் கொள்ளலாம்.