விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும்… உருமாறிய கொரோனா பாதிப்பை தடுக்க வேண்டும்.. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

By Raghupati RFirst Published Nov 27, 2021, 2:28 PM IST
Highlights

உருமாறிய புதிய வகை கொரோனா பாதித்த நாடுகளின் விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ஆன B.1.1.529 தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது. இதுவரை உலகமெங்கும் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் இதுதான் மிக மோசமானது என்கிறார்கள்.இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பெரிய அளவில் வேலை செய்து விடாது.

நிச்சயமாக குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும் என்றும் புதிய வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த வைரஸ் பற்றி ஆலோசிக்க, விவாதிக்க உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடியது. நேற்று நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமிக்ரான்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர். 

இதற்கிடையே புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களை, இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘புதிய வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமான இயக்கங்களை நிறுத்துமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் சிரமப்பட்டு, கொரோனாவில் இருந்து நம் நாடு மீண்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு வைரஸ் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

click me!