இனி வெளிநாடுகளுக்கு பறக்கலாம்… டிச.15 முதல் தொடங்குகிறது சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை!!

By Narendran SFirst Published Nov 26, 2021, 8:28 PM IST
Highlights

சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதன் காரணமாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை அடுத்து பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை முடங்கியது. அதுமட்டுமின்றி விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. எனினும், வெளி நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும், அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

அதே சமயம், ஏர் பபுள் ஏற்பாட்டின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை அடுத்து தற்போது, நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது. பயணிகள் ரயில் சேவையும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால் விமான போக்குவரத்தை பொறுத்தவரை இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை சீரடைந்தாலும், வெளிநாடுகளுக்கு விமான சேவை சீராகவில்லை. இதற்கிடையே, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால், விரைவில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை இயல்புநிலைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இன்று, வணிக ரீதியான சர்வதேச பயணிகள் விமானச் சேவை, அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3 வகையாக வெளிநாடுகள் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப பயணிகள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால், வெளி நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே தற்போது தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அண்டை நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா, புதிய வைரஸ் பாதிப்புள்ள போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங்கில் இருந்து பயணிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதிக்குள் புதிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவினால் அந்த நேரத்தில் அதற்கேற்ப முடிவு மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

click me!