வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்து மதத் தலங்கள்.. காஷ்மீரில் களமிறங்கிய மத்திய அரசு..

By Ganesh RamachandranFirst Published Nov 26, 2021, 3:37 PM IST
Highlights

வன்முறைகளால் மக்களின் வாழ்கை மட்டுமல்ல, இந்து மத, பௌத்த மத வழிபாட்டுத் தலங்களும் காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணைய தலைவராக பொறுப்பேற்றுள்ள தருண் விஜய்.

சுதந்திரமடைந்த பிறகு முதன் முறையாக காஷ்மீரில் உள்ள இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் பற்றிய கணக்கெடுப்பு மற்றும் ஆய்வறிக்கையை மத்திய அரசு தயாரிக்கிறது. மத்திய அரசின் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையம் சார்பில் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக சமீபத்தில் பொருப்பேற்றுள்ளார் தருண் விஜய். காஷ்மீர் முழுவதும் பயணித்து இந்து கோவில்கள் மற்றும் பௌத்த கோவில்களின் நிலை மற்றும் தேவைப்படும் சீரமைப்புப் பணிகள் குறித்த அறிக்கையை அவர் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்த தருண் விஜய் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் உள்ளார். என்றாலும் இந்திய தொல்லியல் துறை உதவியுடன் காஷ்மீர் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பல கோவில்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளதாகக் கூறும் தருண் விஜய், ரெய்னாவாரி என்னுமிடத்தில் உள்ள பழமை வாய்ந்த விட்டல் பைரவர் கோவில் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்படுவது வேதனையளித்ததாகக் குறிப்பிடுகிறார். காஷ்மீரில் வன்முறையால் மக்களின் வாழ்கை மட்டுமல்ல, பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் தருண் விஜய்.

மோடி அரசின் இந்த முயற்சி காஷ்மீரில் உள்ள இந்து, பௌத்த கோவில்களை மீட்டெடுக்கும் முயற்சி என்று கூறப்ப்ட்டுள்ளது. காரணம் தற்போது வரையில் இந்த நினைவுச் சின்னங்களில் காவலாளிகளைக் கூட மாநில அரசு நியமிக்கவில்லை என்றும், பல இடங்களில் இந்தக் கோவில்களின் கதவுகளில் ஜிஹாதிகள் தேசவிரோத வாசகங்களை எழுதியுள்ளதாகவும் கூறுகிறார் தருண் விஜய். ரெய்னாவாரி விட்டல் பைரவர் கோவில், மார்தாண்ட் கோவில் போன்ற மூன்று முக்கிய தலங்களை சீரமைத்து யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் காஷ்மீர் இந்து, பௌத்த சின்னங்கள் பற்றிய விரிவான அறிக்கையை தயாரித்து வருவதாகவும், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!