குறைந்தது காற்றுமாசு… பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டது டெல்லி அரசு!!

By Narendran SFirst Published Nov 24, 2021, 6:21 PM IST
Highlights

டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளதை அடுத்து நவம்பர் 29 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளதை அடுத்து நவம்பர் 29 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற அளவிற்கு காற்றின் தரம் தற்போது காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400யை தாண்டியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தன் மூலம் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும்காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் டெல்லியின் சுற்றுச்சூழல் இந்த வாரம் நிலைமை மேலும் மோசமடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து டெல்லியில் முழு ஊரடங்கை டெல்லி அரசு அமல்படுத்தியது. அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர். தனியார் நிறுவனங்களும் இதே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதேபோல கட்டுமான தொழில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதேபோல அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களும் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் சில நாட்களுக்கு முன் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளது. அரசின் நடவடிக்கைகளால் டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளதை அடுத்து நவம்பர் 29 ஆம் தேதி முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்துகொள்ளவும் டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், டெல்லியில், காற்றின் தரம் கடந்த சில நாட்களாக மேம்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக வரும் 29 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் நேரடி வகுப்பில் அச்சமின்றி கலந்து கொள்ளலாம் என்று கூறிய அவர், டெல்லி மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதில், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் டெல்லி அரசு ஊழியர்கள் வசிக்கும் பகுதிகளில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். டெல்லியில், காற்று மாசு காரணமாக, கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!