கிரிப்டோகரன்சியும் சீட்டு கம்பெணியும் ஒன்னுதான்… அதிர்ச்சி தரும் முன்னாள் RBI கவர்னர்!! | cryptocurrency

By Narendran SFirst Published Nov 24, 2021, 6:01 PM IST
Highlights

#cryptocurrency | கிரிப்டோ கரன்சியை வைத்துள்ள முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 

கிரிப்டோ கரன்சியை வைத்துள்ள முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிட்டு அதற்கான மசோதாவை சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு சமர்ப்பித்துள்ள இந்த மசோதா மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீட்டு உலகமே இந்தியாவின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் ரகுராம் ராஜன் கிரிப்டோகரன்சி குறித்து பேசினார்.

அப்போது, சர்வதேச கிரிப்டோகரன்சி சந்தையில் தற்போது 6000க்கும் அதிகமான கிரிப்டோகரன்சிகள் உள்ளதாகவும் அதில் ஒன்று அல்லது இரண்டு அதிகப்படியாகச் சில கிரிப்டோகரன்சி மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் பல கிரிப்டோகரன்சிகளை வாங்குவதற்கு ஆட்கள் உள்ளதால் மட்டுமே அதன் விலை உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சீட்டு நிறுவனங்கள் மக்களின் பணத்தைத் திருடிக்கொண்டு மாயமாகி வருவது போல தான் முறைப்படுத்தாத கிரிப்டோ கரன்சியை வைத்துள்ள முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், கிரிப்டோகரன்சிக்கு மதிப்பே இல்லை என்பதில்லை, ஆனால் நிலையான மதிப்பீடு இல்லை என்றும் இதேபோல் பேமெண்ட், நிதியியல் சேவைகளில் பயன்படுத்தும் கிரிப்டோகரன்சிகள் மதிப்பு பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். 

அமெரிக்காவில் கிரிப்டோ சந்தை 2.5 டிரில்லியன் டாலர் பிரச்சனையாக உள்ளதாக கூறிய இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இத்துறையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத காரணத்தால் இதை எப்படி முறைப்படுத்துவது என்பது குழப்பமாக உள்ளது என்றும் இந்தியாவில் கிரிப்டோ சந்தையை முறைப்படுத்த அரசு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் இருந்து நேரடியாகத் தகவல் பெற்று, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் பெரியதாக இருக்கும் போது அரசு நேரடியாக ஆய்வு செய்து மக்களுக்கு இது மோசடி தளம் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் மக்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதே வேளையில் இந்திய அரசு பிளாக்செயின் டெக்னாலஜியை பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் பணப் பரிமாற்றத்தை மிகவும் குறைந்த செலவில் அனுப்ப முடியும் என்றும் குறிப்பாக வெளிநாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தை பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் குறைந்த செலவில் வேகமாக அனுப்ப முடியும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

click me!