பிரதமரின் அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்… மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

By Narendran SFirst Published Nov 24, 2021, 3:32 PM IST
Highlights

3 புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

3 புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்று பிரதமர் மோடி ஓராண்டாக கூறிவரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செங்கோட்டை முற்றுகை, டிராக்டர் பேரணி, ரயில் மறியல், பல மாதங்களாக சாலைகள் மூடல் என விவசாயிகள் போராட்டம் பெரும் நாடு முழுவதும் பேசப்பட்டது.

இந்தநிலையில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் நாட்டில்  விவசாயிகள் 80% பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர் என்றும் கூறிய அவர், விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றும் ஆனால் தங்களால் விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். விவசாயிகளிடம் தான் மன்னிப்பு கோருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இதனால் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுகிறது என்றும் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதை மத்திய அரசின் நோக்கம் என்றும் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் இதற்கான மசோதா எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில்  வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ இடம்பெற்று உள்ளது. இதன்மூலம், வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும்  ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!