அடே எப்பா… பைப்ப திறந்தா பணம் கொட்டுது... கர்நாடகாவில் பரபரப்பு!!

By Narendran SFirst Published Nov 24, 2021, 4:35 PM IST
Highlights

கர்நாடகா மாநில பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் போலியாக கழிவு நீர் குழாய் அமைத்து அதனுள் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கர்நாடகா மாநில பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் போலியாக கழிவு நீர் குழாய் அமைத்து அதனுள் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் அறுபத்தி எட்டு இடங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உயர் பதவியில் உள்ள 15 அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 68 இடங்களில் 15 அதிகாரிகளை குறி வைத்து ஊழல் தடுப்பு படையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய்களுக்கு லஞ்ச பணம் மூலமாக வாங்கப்பட்ட தங்க நகைகள் சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்க பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த சோதனையில் ஊழல் தடுப்பு படையின் 8 கண்காணிப்பாளர்கள் தலைமையில் 400 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை, விவசாயத்துறை, பால்வளத்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, பெங்களூரு மாநகராட்சி உட்பட்ட உயர் அதிகாரிகள் வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்றது.

கதக் மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறை இணை ஆணையர் ருத்ரேஷ் அப்பா வீட்டில் மட்டும் மூன்றரை கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 100 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் தொட்பலாபூர் வருவாய் துறை ஆய்வாளர் லக்ஷ்மி நரசிம்மா அவரது வீட்டில் இருந்து சுமார் 5 கிலோ கிலோ தங்கம் 10 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் கலபுரகி பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரி சாந்தப்பா கவுடா வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர், போலியாக கழிவு நீர் குழாய் அமைத்து அதனுள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை அடுத்து ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் குழாய்குள் குச்சியை விட்டு குத்தும் அதில் இருந்து கட்டுக்கட்டாக பணம் வெளியே வந்துள்ளது.

ஏற்கனவே இவரது வீட்டில் இருந்து ஒன்றரை கிலொ தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கழிவு நீர் குழாய்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து பேசிய ஊழல் தடுப்பு படையினர், 15 அதிகாரிகளின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களின் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர்களது வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தின் மதிப்பையும் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

click me!