#BREAKING செப்.12ல் நீட் நுழைவுத் தேர்வு... நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 12, 2021, 6:41 PM IST
Highlights

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 
 

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் செப்டம்பர் 12ம் தேதி முதல் நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நாளை மாலை 5 மணி முதல் நீட் தேர்விற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 155யில் நகரங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவலையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு தேர்வு எழுதும் நகரங்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 862 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா சூழ்நிலை காரணமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 12ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 

click me!