
‘பணிவுடன் கேட்கிறேன்’ என்ற வார்த்தையை எம்.பி.க்கள், அமைச்சர்கள் யாரும் அவையில் தெரிவிக்க வேண்டாம் மாநிலங்கள் அவை தலைவர் வெங்கையா நாயுடு மீண்டும் அறிவுரை கூறியுள்ளார்.
மாநிலங்கள் அவையில் எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஏதேனும் மசோதாக்களை, ஆவணங்களை தாக்கல் செய்யும் போது, ‘ நான் பணிவுடன் இதை தாக்கல் செய்கிறேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த வார்த்தையை எம்.பி.க்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 15-ந்தேதி குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய அன்று மாநிலங்கள் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, எம்.பி.க்களுக்கு ஒரு அறிவுரை கூறினார். இனிமேல், அவையில் மசோதாக்கள், ஆவணங்களை தாக்கல் செய்யும் போது, ‘ நான் பணிவுடன் இதை தாக்கல் செய்கிறேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள், அதற்கு பதிலாக நான் மசோதாவை தாக்கல் செய்கிறேன் என்று எனது பெயரைக் கூறி கூறலாம் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்பின் கடந்த 15ந்தேதியில் இருந்து நேற்று வரை எந்த எம்.பி.க்களும் பணிவுடன் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் பி.பி. சவுத்ரி நேற்று ஆவணங்களைத் தாக்கல் செய்யும் போது, ‘ நான் பணிவுடன் இதை தாக்கல் செய்கிறேன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அப்போது, அவைத் தலைவர் வெங்ைகயா நாயுடு மீண்டும் சொல்கிறேன்‘ நான் பணிவுடன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது மிகச்சிறப்பாக இருக்கும். என்று அவர் தெரிவித்தார்.