விவசாயத்தில் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த எம்.எஸ்.சுவாமிநாதன்: பிரதமர் மோடி கட்டுரை

By SG BalanFirst Published Oct 7, 2023, 9:40 AM IST
Highlights

பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் தளராத அர்ப்பணிப்பும் தொலைநோக்கு பார்வையும் விவசாயத்தில் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்தது என்று பிரதமர் மோடி தனது கட்டுரையில் பாராட்டி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனை நாம் இழந்திருக்கிறோம். தொலைநோக்குப் பார்வையுடன் விவசாய அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தியவரை, ஒரு தலைசிறந்த மனிதரை நம் தேசம் இழந்துவிட்டது. இந்தியாவுக்கான அவரது பங்களிப்பு என்றென்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியாவை நேசித்தார். நமது தேசம், குறிப்பாக நமது விவசாயிகள் செழிப்பான வாழ்க்கை வாழ விரும்பினார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் வேறு எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுத்திருக்கலாம். 1943ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் அவரிடம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததால், அவர் விவசாயம் படிக்க முடிவுசெய்தார்.

இளம் வயதிலேயே, அவர் டாக்டர் நார்மன் போர்லாக் உடன் தொடர்பு கொண்டிரு்தார். போர்லாக்கின் பணிகளை மிகவும் விரிவாகப் பின்தொடர்ந்து வந்தார். 1950களில், அவருக்கு அமெரிக்காவில் ஆசிரியர் பணிக்கான வாய்ப்பு கிடைத்தபோது, இந்தியாவில் பணியாற்ற விரும்பிய காரணத்தால் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.

பெண்கள் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த எம்.எஸ்.சுவாமிநாதன்: மகள் சௌம்யா சுவாமிநாதன் பெருமிதம்

நம் தேசத்தை தன்னிறைவு மற்றும் தன்னம்பிக்கையின் பாதையில் வழிநடத்த அவர் எதிர்கொண்ட சவாலான சூழ்நிலைகளைப் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் இருபது ஆண்டுகளில், நாம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டோம். அவற்றில் ஒன்று உணவுப் பற்றாக்குறை. 1960 களின் முற்பகுதியில், இந்தியா அச்சுறுத்தும் பஞ்சத்துடன் போராடிக்கொண்டிருந்தது.

அப்போதுதான் பேராசிரியர் சுவாமிநாதனின் தளராத அர்ப்பணிப்பும் தொலைநோக்கு பார்வையும் விவசாயத்தில் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்தது. முன்னோடியாக விளங்கிய அவரது பணி கோதுமை உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. இதனால் உணவுப் பற்றாக்குறை உள்ள நாடாக இருந்த இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியது. இந்த மகத்தான சாதனை அவருக்கு "இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை" என்ற பெருமையைப் பெற்றுத்தந்தது.

பசுமைப் புரட்சி இந்தியாவால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கைக் கொடுத்தது. நமக்கு பல கோடி சவால்கள் இருந்தாலும், அந்தச் சவால்களை முறியடிக்கும் அளவுக்கு பல கோடி புதுமையான மனங்களும் உள்ளன. பசுமைப் புரட்சிக்குப் பின்பான ஐம்பது வருடங்களில் இந்திய விவசாயம் மிகவும் நவீனமாகவும் முற்போக்கானதாகவும் மாறிவிட்டது. அதற்கு பேராசிரியர் சுவாமிநாதன் அமைத்த அடித்தளத்தை என்றும் மறக்கமுடியாது.

எம். எஸ். சுவாமிநாதன் யார்? அவரை இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைப்பது ஏன்?

உருளைக்கிழங்கு பயிர்களை பாதிக்கும் ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடுவதில் அவர் முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டார். அது உருளைக்கிழங்கு விவசாயத்தில் குளிர்ந்த வெப்பநிலையைத் தாங்கும் திறனை அளித்தது. இன்று, உலகம் சிறுதானியங்களால் செய்யப்படும் உணவுகள் குறித்துப் பேசுகிறது. ஆனால் பேராசிரியர் சுவாமிநாதன் 1990 களில் இருந்தே சிறுதானிய உற்பத்தியை ஊக்குவித்து வந்தார்.

2001ல் குஜராத்தின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் பேராசிரியர் சுவாமிநாதனுடனான எனது தனிப்பட்ட தொடர்புகள் விரிவானவை. அந்த நாட்களில் குஜராத் விவசாயத்திற்குப் பெயர் பெற்றதில்லை. தொடர்ச்சியான வறட்சி, சூறாவளி மற்றும் நிலநடுக்கம் ஆகியவை மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை பாதித்தன. அப்போது நாங்கள் தொடங்கிய பல முயற்சிகளில் ஒன்று மண் ஆரோக்கிய அட்டை. மண்ணை நன்கு புரிந்துகொள்ளவும், மண்ணில் பிரச்சனைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்கவும் அது உதவியது.

இத்திட்டத்தின் பின்னணியில்தான் நான் பேராசிரியர் சுவாமிநாதனைச் சந்தித்தேன். அவர் இந்தத் திட்டத்தைப் பாராட்டியதுடன், அதற்கான மதிப்புமிக்க ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டார். இத்திட்டம் குறித்து சந்தேகம் கொண்டவர்கள்கூட இத்திட்டத்தின் பலனைப் புரிந்துகொள்ள அவரது பாராட்டு போதுமானதாக இருந்தது.

முதலமைச்சராக இருந்த காலத்திலும், பிரதமராக பதவியேற்றபோதும் அவருடன் தொடர்பு நீட்டித்தது. நான் அவரை 2016இல் சர்வதேச வேளாண்-பல்லுயிர் காங்கிரஸில் சந்தித்தேன். அடுத்த ஆண்டு 2017இல், அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டேன்.

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

குறள் விவசாயிகளை உலகத்தை ஒன்றாக இணைக்கும் கருவி என்று விவரிக்கிறது. ஏனெனில் விவசாயிகளே அனைவரையும் தாங்கிக்கொள்கிறார்கள். பேராசிரியர் சுவாமிநாதன் இதை நன்றாகப் புரிந்துகொண்டவர். நிறைய பேர் அவரை ஒரு விவசாய விஞ்ஞானி என்று அழைக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு உண்மையில் விவசாயிகளின் விஞ்ஞானி. அவர் மனத்தளவில் ஒரு விவசாயியாகவே இருந்தார். அவரது ஆராய்ச்சிகளுக்குக் கிடைத்த வெற்றி, ஆய்வகங்களுக்கு வெளியே, பண்ணைகள் மற்றும் வயல்களில் ஏற்படுத்திய தாக்கத்தில்தான் உள்ளது.

அவரது பணி அறிவியல் அறிவுக்கும் அதன் நடைமுறை பயன்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தது. மனித முன்னேற்றத்திற்கும் சூழலியல் நிலைத்தன்மைக்கும் இடையே உள்ள நுட்பமான சமநிலையை வலியுறுத்தி, நிலையான விவசாயத்திற்காக அவர் தொடர்ந்து வாதிட்டார். சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களும் புதுமையின் பலனைப் பெறுவதை உறுதிசெய்யவும் பேராசிரியர் சுவாமிநாதன் வலியுறுத்தினார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். குறிப்பாக, விவசாயத்தில் ஈடுபடும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் பற்றிய இன்னொரு செய்தியும் குறிப்பிடத்தக்கது. அவர் புதுமை மற்றும் வழிகாட்டுதலின் முன்னுதாரணமாக உயர்ந்து நிற்கிறார். 1987ஆம் ஆண்டில் உலக உணவுப் பரிசை வென்றார். இந்த மதிப்புமிக்க கௌரவத்தை முதன்முதலில் பெற்றவர் அவர். அப்போது கிடைத்த பரிசுத்தொகையைப் பயன்படுத்தி அவர் ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். இன்றுவரை, இது பல்வேறு துறைகளில் விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்

எண்ணற்ற மனங்களுக்கு புதுமையின் மீது ஆர்வர் ஏற்பட வைத்திருக்கிறார். வேகமாக மாறிவரும் உலகில், அவரது அறிவுத்திறனும், வழிகாட்டுதலும், கண்டுபிடிப்புகளும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவர் ஒரு நிறுவனத்தை கட்டியெழுப்பு நபராகவும் இருந்தார். துடிப்பான ஆராய்ச்சிகள் நடைபெறும் பல மையங்களில் அவர் பங்களிப்பு உள்ளது. மணிலாவில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். அவரது பங்களிப்புடன் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய மண்டல மையம் 2018இல் வாரணாசியில் திறக்கப்பட்டது.

டாக்டர் சுவாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்த மீண்டும் திருக்குறளையே மேற்கோள் காட்டுகிறேன். "எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" என்று குறள் கூறுகிறது. விவசாயத்தை வலுப்படுத்தவும், விவசாயிகளுக்கு சேவை செய்யவும் வேண்டும் என்றும் தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே முடிவு செய்த ஒரு வீரர் இங்கே இருந்தார். மேலும், அவர் அதை புதுமையாகவும் ஆர்வத்துடனும் செய்தார்.

டாக்டர் சுவாமிநாதனின் பங்களிப்புகள், விவசாயத்தில் புதுமை மற்றும் நிலைத்தன்மையின் பாதையில் செல்ல ஊக்குவித்து வழிநடத்துகின்றன. அவர் விரும்பிய கொள்கைகளின் மீதான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்திகொண்டே இருக்கவேண்டும். விவசாயிகளின் நலனுக்காக போராட வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகளின் பலன்கள் வேர்வரை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்க வேண்டும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல்நலக்குறைவால் காலமானார்

click me!