
கேரளாவில் வெளிமாநிலங்களில் இருந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், அன்னியமாக உணரக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு மலையாளம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் பினராயி தலைமையிலான கேரள அரசு தொடங்கி இருக்கிறது.
சங்கதி
2-வது எழுத்தறிவுப் புரட்சியான இதற்கு ‘சங்கதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சங்கதி என்பதற்கு மலையாளத்தில் ‘ நண்பன், தோழி’ என்று அர்த்தம்.
நாட்டிலேயே 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா கடந்த 1991ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது 2-வது புரட்சியை தொடங்கி இருக்கிறது.
25 லட்சம்
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்ஏராளமானோர் கேரளாவின் பல்வேறு நகரங்களில் 25 லட்சம் பேர் பணி புரிந்து வருகின்றனர். இதில் பெரம்பாவூரில் அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
எழுத்தறிவு இயக்கம்
இந்நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக கேரளாவுக்கு வந்திருக்கும் தொழிலாளர்கள் அன்னியப்பட்டு விடக்கூடாது, அவர்களும் மாநிலத்தின் மொழி, கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வேண்டும் , மலையாளத்தில் எழுதவும், படிக்கவும் தெரிய வேண்டும் என்பதற்காக ‘சங்கதி’ எனும் இயக்கத்தை கேரள அரசு கொண்டு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘‘சங்கதி’’ இயக்கத்தை முதல்வர்பினராயி விஜயன் தொடங்கிவைத்தார்.
சோதனை முயற்சி
சங்கதி இயக்கத்தின் இயக்குநர் பி.எஸ். ஸ்ரீலேகா கூறுகையில், “ சங்கதி இயக்கம் ஏற்கனவே சோதனை முயற்சியாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, எர்ணாகுளம் மாவட்டம், பெரம்பாவூரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை தொடங்கும் போது, எங்கள் முன் பல கேள்விகள் எழுந்தன.
அங்கம்
இப்போது இயக்கத்தை விரிவு படுத்த தொடங்கி இருக்கிறோம். வெளிமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களும் மனிதர்கள் தான், அவர்கள்கிரிமினல்கள் அல்ல. கேரளாவின் கட்டுமானத்துறை, தொழிற்சாலை ஆகியவற்றின் அங்கம் வெளி மாநிலத் தொழிலாளர்கள். அவர்கள் இல்லாமல், இந்த துறை நீண்டகாலமாக செயல்பட முடியாது. அவர்களை தனிமைப்படுத்தமாட்டோம்.
கல்லூரி மாணவர்கள்
எங்களின் சோதனைத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டது. கல்லூரி மாணவர்கள் தொழிலாளர்களுக்கு மலையாளம் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், பொதுமக்களும், மாணவர்களும் வௌி மாநிலத் தொழிலாளர்களோடு நண்பர்கள் போல் பழக முடிகிறது.
பெரம்பாவூரில் கடந்த 3 மாதங்களில் 432 தொழிலாளர்களுக்கு மலையாளம் கற்பிக்கப்பட்டது. வார விடுமுறை நாட்களில் வகுப்புகள் ஒதுக்கி கற்பிக்கப்படுகிறது. அடுத்ததாக, இந்த திட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கழக்குட்டம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள பெரிநாடு பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.