
உத்தரப்பிரதேசத்தில் உருளைக்கிழங்கு விளைச்சல் அபரிமிதமானதால், கிலோ 20 காசுக்கு விலை சரிந்துள்ளது. உருளைக்கிழங்கு சேமித்து வைக்க சேமிப்பு கிட்டங்கி வசதிகள் இருந்தாலும் அது செயல்படாததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பா.ஜனதா ஆட்சி
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்ய நாத் இருந்து வருகிறார். இந்த ஆண்டு சீசனில், உருளைக்கிழங்கு விளைச்சல் அபரிமிதமாகி, ஏறக்குறைய 2.5 லட்சம் டன் தேக்கமடைந்துள்ளன.
இவை சேமித்து வைக்க இடமில்லாததால், விவசாயிகள் தங்களின் விளை நிலங்களிலும், சாலையின் ஓரத்திலும் குவித்து வைத்துள்ளனர். சிறுவிவசாயிகள் இதை ஆடு, மாடுகளுக்கு உணவாக அளிக்கும் கொடுமை நடந்து வருகிறது.
கிலோ 20 காசு
மொத்த விலை சந்தையில் உருளைக்கிழங்கு விலை கிலோ 20 காசுக்கும், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூடை ரூ.10-க்கும் விற்பனையாகிறது. மிகப்பெரிய சந்தைகளில் உருளைக்கிழங்குகளை கொண்டுபோய் விற்பனை செய்ய போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பதால் சிறு விவசாயிகள் கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்து நஷ்டமடைந்து வருகின்றனர்.
கட்டணம் அதிகம்
மேலும், குளிர்பதன கிடங்குகளில் உருளைக்கிழங்கு மூடை ஒன்று வைக்க ரூ.110 கட்டணமாக விதிக்கப்படுகிறது. ஆனால், விலை அந்த அளவுக்கு கிடைக்காததால், அங்கும் விவசாயிகள் செல்ல அச்சப்படுகின்றனர்.
மூடை ரூ.10
கடந்த ஜூலை மாதம் 50 கிலோ கொண்ட உருளைக்கிழங்கு மூடை ரூ.400க்கு விற்பனையான நிலையில், இப்போது ரூ.10க்கும் குறைவாக விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு விலை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து, நிலத்தில் இருந்து அறுவடை செய்யாமல் பல விவசாயிகள் அப்படியே விட்டுவிட்டுள்ளனர்.
செயல்படவில்லை
ஆக்ரா உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 240 குளிர்பதன கிடங்குகள் இருந்தும், அங்கு மின்கட்டணம் அதிகமாக இருக்கிறது எனக் கூறி அதைச் செயல்படுத்தாமல் அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர். இதனால், உருளைக்கிழங்குகளை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் சாலை ஓரத்தில் கொட்டி பாதுகாக்கின்றனர்.
2.50 லட்சம் டன் தேக்கம்
உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் பொதுச் செயலாளர் அமிர் பாய் கூறுகையில், “ 50 கிலோ எடை கொண்ட 50 லட்சம் உருளைக்கிழங்கு மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இவை மொத்தம் 2.5 லட்சம் டன்னாகும். குளிர்பதன கிடங்குகளில் உருளைக் கிழங்குகளை சேமிக்க அதிகமான கட்டணம் விதிக்கப்படுகிறது. இதை செலுத்த விவசாயிகளால் முடியாததால், மிகுந்த நஷ்டமடைகின்றனர். ஆக்ரா, பெரோசாபாத், மதுரா, மெயின்பூரி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 1.77 லட்சம் ஏக்கரில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது ’’ எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் மீது நடவடிக்கை
தோட்டகலைத்துறை துணை இயக்குநர் கவுசல் குமார் கூறுகையில், “ உருளைக்கிழங்குகளை திறந்த வௌியில் கொட்டி வைக்கும்விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அழுகிப்போன உருளைக்கிழங்குகளை அழிக்க தனியாக விதிமுறைகள் இருக்கின்றன. இதை ஆடு, மாடுகளுக்கும் கொடுக்க கூாடது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு முறைப்படி வழிகாட்டு நெறிமுறைகளும், அழுகிய உருளைக்கிழங்குகள் பாதுகாப்பாக அழிக்கப்படுகின்றனவா என்பதை ஆராய குழு அமைக்கப்படும். ஆகார் நகராட்சி, மாசுக்க ட்டுப்பாட்டு வாரியம், கால்நடைத்துறை, விவசாயத்துறை, தோட்டகலைத்துறை சேர்ந்து குழு உருவாக்கப்படும்’’ என்றார்.