
விமானங்களிலும், ஓட்டல்களிலும் கட்டணத் தள்ளுபடி அளிக்கப்படுவதைப் போல் ரெயில்வே டிக்கெட் முன்பதிவிலும் கட்டணத் தள்ளுபடி அளிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
ரெயில்களில் டிக்கெட் முழுமையாக விற்பனையாகாத நிலையில், முன்பதிவு செய்யப்படாத நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து இருப்பதாக, ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
வருகை குறைந்தது
ரெயில்வேயில் ‘பிளக்சி பேர்’ (flexi fare) கட்டணம் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ரெயில் டிக்கெட்முன்பதிவு ஆவதைப் பொருத்து 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும். இந்த திட்டம் மூலம்ரெயில்வேக்கு வருமானம் கிடைத்தபோதிலும், பயணிகளை இழந்தது.
ஆய்வுக் குழு
இந்த ‘பிளக்சி கட்டணம்’ குறித்து ஆய்வு செய்ய கடந்த 11ந்தேதி அஸ்வினி லோகானி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை குறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது-
அடுத்த கட்டம்
விமானங்களிலும், ஓட்டல்களிலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தில் வழங்கப்படும் தள்ளுபடி போல், ரெயில்வே துறையிலும் தள்ளுபடி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாமல், ரெயில்வே துறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
கட்டணத் தள்ளுபடி
ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு முழுமையாக இல்லாத போது, ஒட்டல்கள், விமானங்களில் இருப்பதைப் போல் கட்டணத் தள்ளுபடி தரப்படும்.
‘பிளக்சி கட்டணம்’ குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அஸ்வினி லோகானி தலைமையிலான குழுவின் அறிக்கையை முழுமையாக பரிசீலிப்போம். அவர்கள் ஓட்டல்களில் இருப்பது போல் தள்ளுபடி தர ரெயில்வேக்கு பரிந்துரைத்துள்ளனர். முதலில் டிக்கெட் கட்டணம் குறைவாகவும், முன்பதிவு அதிகமாகும்போது கட்டணத்தை உயர்த்தவும் கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.