
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பணத்தில் எனது பங்கு எங்கே என்று கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள விவசாயி கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலத்தில் மனந்த்வாடி கிராமத்தை சேர்ந்த கே.சாத்து என்ற விவசாயிதான் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில், கடந்த மக்களவைத் தேர்தலின் போது, கருப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் அளவுக்கு வரவு வைக்கப்படும் என்று மோடி கூறியதைக் குறிப்பிட்டு இருக்கிறார்.
‘‘தற்போது ஏற்பட்டிருக்கும் விவசாய நட்டத்தில் இருந்து மீள, என் பங்கில் இருந்து தற்போதைக்கு ஒரு 5 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால் நன்றாக இருக்கும் என்றும்’’ அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘‘நீங்கள் பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் உங்கள் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்துவிட்டது.
ஆனால் நுகர்வுப் பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. மேலும், எரிவாயு உருளை உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பது சாதாரண ஏழை, எளிய மக்களை மிகவும் பாதித்துள்ளது.
எனவே, நான் உங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தற்போதைக்கு வெறும் 5 லட்சம் ரூபாயையாவது எனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுங்கள் என்பதுதான்’’ என்று கடிதத்தில் அவர் கூறி இருக்கிறார்.
அதோடு நின்றுவிடாமல், அந்த கடிதத்தில், தான் கணக்கு வைத்திருக்கும் பெடரல் வங்கிக் கணக்கு எண்ணையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எப்போதும் கவலைப்படுவதில்லை. ஆனால் மக்கள் விட்டுவிடக் கூடாது. கேள்வி கேட்க வேண்டும்’’ என்று கூறினார்.
முன்னதாக, நடிகர் மும்முட்டி நடித்த சோப்பு விளம்பரத்துக்கு எதிராக அவர் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, சோப்பு விளம்பரத்தில் மம்முட்டி கூறியது போல, அதனைப் பயன்படுத்தியும் தான் வெள்ளையாகவில்லை என்பதால் தனக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கில் ஒருவழியாக சோப்பு நிறுவனம் சாத்துவுக்கு ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.