
‘‘என் மகன் ஜெய் எந்த விதமான பண மோசடியிலும் ஈடுபடவில்லை என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா முதல் முறையாக விளக்கம் அளித்து இருக்கிறார்..
16 ஆயிரம் மடங்கு...
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷா இயக்குநராக இருக்கும் நிறுவனம் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகான குறைந்த கால கட்டத்தில் அபரிமிதமான வளர்ச்சி (16 ஆயிரம் மடங்கு) பெற்றதாகவும், அதன் மூலமாக அவர் அதிகமான அளவு பணம் ஈட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ஆங்கில இணையதளம் ஒன்றில் (வயர்) ஆதாரங்களை குறிப்பிட்டு கட்டுரை ஒன்று வெளியானது.
மான நஷ்ட வழக்கு
அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட ஆங்கில இணைய தளத்தின் மீது ரூ.100 கோடி கேட்டு ஜெய் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். இதன் காரணமாக எதிர்கட்சிகள் பாஜக மீது கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜகவையும் ஜெய்யையும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஜெய்க்கு ஆதரவாக மத்திய அமைச்சர்களும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
முதன்முறையாக
ஆனால், இந்த விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘இந்தியா டுடே' பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த ‘குஜராத் பஞ்சாயத்து' என்னும் நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார்.
அப்பொழுது அவர் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசியதாவது-
ஏற்றுமதி-இறக்குமதி
ஜெய்யின் வியாபாரத்தில் எந்த விதமான பண மோசடியும் நடைபெறவில்லை. அந்நிறுவனமானது முழுமையாக சரக்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களில் நிறுவன விற்றுமுதலானது அதிகமாக இருக்கும்.
ஆனால் லாபம் என்பது குறைவாக இருக்கும். நாங்கள் கம்பு, சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறோம். அதே நேரம் கொத்தமல்லியினை இறக்குமதி செய்கிறோம்.
வங்கிகள் மூலம்..
முதலில் ரூ.80 கோடி ஆண்டு விற்றுமுதலாக இருந்த பொழுது நஷ்டம் ரூ. 1.5 கோடியாக இருக்கிறது. இதில் எங்கிருந்து பண மோசடி வருகிறது? எல்லா பணப் பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமும், காசோலைகள் மூலமுமே நடைபெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மான நஷ்ட வழக்கு
ஆங்கில இணையதளத்தின் மீது ஜெய் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தது பற்றி அமித்ஷாவிடம் கேட்ட பொழுது, ‘‘இதில் ஊழல் எதுவும் இல்லை என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் மீது எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதில் ஒன்றிலாவது அக்கட்சி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது உண்டா? ஏன் அந்த தைரியம் இல்லை? ஆனால் நாங்கள் நேரடியாக வழக்கு தொடர்ந்து விசாரணை கோரி இருக்கிறோம். யாரிடம் ஆதாரங்கள் உள்ளதோ அவர்கள் நீதிமன்றத்தில் வந்து சமர்ப்பிக்கலாம். பின்னர் நீதிமன்றம் முடிவு செய்யும்.
முக்கியமான ஒரு விஷயத்தினை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜெய்யின் நிறுவனம் அரசாங்கத்துடன் எந்த விதமான வியாபாரத்திலும் ஈடுபடவில்லை. அரசாங்க ஒப்பந்தம் மூலமோ அல்லது அரசாங்க நிலம் மூலமோ ஒரு ரூபாய் கூட பெறப்படவில்லை. லஞ்சமாகவும் எந்த தொகையும் பெறப்படவில்லை’’ என்று பதில் அளித்தார்.
இறுதியாக ஜெய்க்கு வழங்கப்பட்ட வங்கிகளின் பிணை இல்லா கடன் பற்றி கேட்ட பொழுது, அது பிணையில்லா கடன் அல்ல; அது ஒரு நீண்டகால தொடர் கடனாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.