போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு… கொச்சி மெட்ரோ ரெயிலைப் பிடித்து திருமணத்துக்கு வந்த மணமகன்

First Published Dec 29, 2017, 11:25 PM IST
Highlights
The groom who stuck in the traffic travel metro train and come to the weddingl

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு தவித்த மணமகன், கொச்சி மெட்ரோ ரெயிலைப் பிடித்து திருமணத்துக்கு உரிய நேரத்தில் சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கு கடந்த சனிக்கிழமை கொச்சியில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக கடந்த சனிக்கிழமை காலை 6 மணிக்கு பாலக்காட்டில் இருந்து கொச்சிக்கு காரில் ரஞ்சித்தும், அவரின் குடும்பத்தாரும் புறப்பட்டனர்.

அன்று காலை 11 மணிக்கு திருமண முகர்த்தம் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பாலக்காட்டில் இருந்து கொச்சி செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால், உரிய நேரத்தில் திருமண முகர்த்தத்துக்கு காரில் செல்ல முடியாது என்பதை ரஞ்சித் குமார் உணர்ந்தார்.

இதையடுத்து, பாலக்காட்டில் இருந்து ஆலுவா நகர் வந்தபோது, பெண் வீட்டாருக்கு ரஞ்சித் குமார் குடும்பத்தினர் தொலைபேசியில் பேசினர். கொச்சி வருவதற்கு வேறுஏதேனும் வழி இருக்கிறதா? எனக் கேட்டனர். அவர்கள் அங்கிருந்து மெட்ரோ ரெயில் மூலம் கொச்சிக்கு வந்துவிடலாம் எனக் கூறினர்.

இதைத் தொடர்ந்து, ரஞ்சித் குமார் மெட்ரோ ரெயில் மூலம் பயணிக்க முடிவு செய்தனர். ஆலுவா மெட்ரோ ரெயில் நிலையம் வந்த ரஞ்சித் குடும்பத்தினர் அந்த மெட்ரோ ரெயிலைப் பிடித்து உரிய நேரத்தில் திருமணத்துக்கு வந்து ேசர்ந்தனர். முகூர்த்த நேரத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன் போய் சேர்ந்த ரஞ்சித் குமார், முக்கிய சடங்குகளை மட்டும் செய்து, மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

தனது அனுபவம் குறித்து மணகன் ரஞ்சித் குமார் பேசிய வீடியோவே கொச்சி மெட்ரோ வெளியிட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “ ஆலுவா ரெயில்நிலையத்துக்கு எங்கள் குடும்பத்தினர் வந்தபோது, டிக்கெட்  பெறும் இடத்தில் நீண்ட வரிசை காத்திருந்தது. அங்கு வரிசையில் நின்று இருந்தவர்களிடம், தனக்கு 11 மணிக்கு திருமணம், வரிசையில் நின்று டிக்கெட் பெற்றால் திருமணத்துக்கு செல்ல முடியாது.

ஆதலால், முதலில் டிக்கெட் பெற அனுமதியுங்கள் என்றேன். அவர்கள் அனைவரும் என் சூழலை உணர்ந்து டிக்கெட் பெற உதவினர். அந்த டிக்கெட்டை பெற்று அடுத்த ரெயிலைப் பிடித்து நான் திருமணத்துக்கு வந்து சேர்ந்தேன். திருமணத்துக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்த்த கொச்சி மெட்ரோவுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்’’ என்றார்.

இதற்கிடையே ரஞ்சித் குமாருக்கும் அவரின் மனைவிக்கும் கொச்சி மெட்ரோ சார்பில் அவர்களுக்கு இலவச மெட்ரோ கார்டு வழங்கியுள்ளது.

click me!