
பத்மாவதி படத்தின் வரலாற்று தகவல்களை ஆய்வு செய்ய முன்னாள் அரசு குடும்பத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தைப் பார்த்து கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக, ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்களை மத்திய திரைப்பட தணிக்கு வாரியம் அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலிஇயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் பத்மாவதி குறித்த வரலாற்று தகவல்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் டிசம்பர் 1–ந் தேதி படம் திரைக்கு வருவது தள்ளிவைக்கப்பட்டது.
இந்த திரைப்படத்துக்கு நாளுக்கு நாள் வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதையடுத்து, பத்மாவதி படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, மத்திய தணிக்கை குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி ஆகியோர் நேரில் ஆஜராகி திரைப்படம் குறித்து தங்கள் கருத்துக்களைக் கூற 30 பேர் கொண்ட நாடாளுமன்றத்தின் தகவல் தொழில்நுட்ப குழு சம்மன் அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப குழு முன்பாக படத்தின்
இயக்குநரும், தணிக்கை துறை தலைவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், படத்தின் வரலாற்று தகவல்களை ஆய்வு செய்ய முன்னாள் அரச குடும்பத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று தகவல்களைப் படம் திரித்துள்ளதா என்று இந்த குழு ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ராஜஸ்தானில் உள்ள இரண்டு கல்லூரிகளின் பேராசிரியர்களான கான்கரோத், பி.எல்.குப்தா ஆகியோருக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இவர்கள் இருவரும், அடுத்த வாரம் பத்மாவதி திரைப்படத்தை அதிகாரிகளுடன் சேர்ந்து பார்க்க உள்ளனர்.