12-வயது சிறுமியுடன் பஞ்சாயத்து தலைவர் 2-வது திருமணம் ...பதவியை பறித்து, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கத் தடை விதித்து அதிரடி நடவடிக்கை

First Published Dec 29, 2017, 9:53 PM IST
Highlights
Panchayat leader 2nd wedding with a 12-year-old gir

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 12 வயது சிறுமியை 2-வது திருமணம் செய்ய முயன்ற 51-வயது பஞ்சாயத்து தலைவரின் பதவி பறிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம், மொரீனா மாவட்டத்தில் பாக்ரார் ஜாகிர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் தலைவர் 51வயது நிரம்பரிய ஜகந்நாத் மாவாய். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது.

இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழை விவசாயின் 12வயது மகளை திருமணம் செய்ய கிராமத்தலைவர் ஜகந்நாத் மாவாய் முயற்சி மேற்கொண்டார். இதற்காக திருமணத்தன்று தன்னுடைய மனைவியை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லும் வகையில் தற்காலிகமாக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க பஞ்சாயத்து தலைவர் முடிவுசெய்தார்.

இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் மாவட்ட நிர்வாகத்துக்கு மைனர் சிறுமியை திருமணம் செய்ய பஞ்சாயத்து தலைவர் முயற்சிக்கிறார் என்று புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், கடந்த 11ந்தேதி அந்த கிராமத்துக்கு வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அந்த சிறுமியின் வயது சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமிக்கு 12 வயதுதான் ஆகிறது என்பதை உறுதி செய்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர் லக்ஸ்கர் கூறுகையில், “ கிராமபஞ்சாயத்து தலைவர் ஜகந்நாத் மாவாய்க்கு ஹெலிபேட் அமைக்க அனுமதி கொடுத்தபின் எங்களுக்கு பஞ்சாயத்து தலைவர் குறித்து புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் குழந்தைகள் ேமம்பாட்டு துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் ஜகந்நாத் மாவாய்,12 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்தார் என்பது உறுதியானது.

இதையடுத்து, மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி சோனியா மீனா, மத்திய பிரதேச பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் படி, ஜகந்நாத் மாவாயை தலைவர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலிலும் போட்யிட தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இது குறித்து பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி சோனியா மீனா கூறுகையில், “ பொறுப்பு மிக்க பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து கொண்டு இப்படி சட்டத்தை மீறுவது தவறு. குழந்தைகள் திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் ஜகந்நாத் மாவாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்மனைவி இருக்கும் போதே 2-வது திருமணம் செய்ய முயன்றதால், அந்த பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

 

click me!