ஒடிசா ரயில் விபத்தின் பலி எண்ணிக்கையை மீண்டும் திருத்திய அரசு.. மொத்தம் எத்தனை பேர் இறந்துள்ளனர்?

By Ramya sFirst Published Jun 6, 2023, 8:55 PM IST
Highlights

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலசோரில் வெள்ளிக்கிழமை நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 275 ஆக ஒடிசா அரசாங்கம் திருத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும் இறந்தவர்களின் எண்ணிக்கையை திருத்தி உள்ளது. உடல்களை இருமுறை எண்ணியதாக குறிப்பிட்டுள்ள ஒடிசா மாநில அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை 288 என்று அறிவித்துள்ளது. ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரதீப் குமார் ஜெனா, உடல்கள் சரிபார்ப்பு, பலத்த காயமடைந்த நோயாளிகளின் இறப்பு மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து புதிய எண் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ நேற்று வரை ரயில் விபத்து நடந்த சூழலில், 275 பேர் பலியாகியுள்ளதாக உறுதி செய்தோம். தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் மருத்துவமனையில் இறந்தவர்களின் விவரங்களைத் தொகுக்க பாலசோர் ஆட்சியரிடம் விவரங்களை கேட்டோம். இவை அனைத்தையும் தொகுத்த பிறகு, இறுதி இறப்பு எண்ணிக்கை 288 என்று மாவட்ட ஆட்சியர் இன்று எங்களுக்கு தெரிவித்தார். 288 இறப்புகளில், 205 உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 83 உடல்கள் அடையாளம் காணும் செயல்முறையின் கீழ் உள்ளன" என்று கூறினார்.

இந்த ரயில் விபத்தில் ஒடிசா மாநிலத்தைச சேர்ந்த 39 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பட்தினருக்கு ரயில்வே அறிவித்த ₹10 லட்சத்துடன் கூடுதலாக ₹5 லட்ச நிதியுதவியை மாநில அரசு வழங்குவதாக தலைமைச் செயலாளர் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் சிகிச்சை மற்றும் உடல்களை அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான செலவை அரசே ஏற்கிறது என்றும் அவர் கூறினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் உயிரிழந்தவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் 103 பேர் சேர்ந்தவர்கள் என்று கூறினார். எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை குறித்து அவர் சந்தேகம் எழுப்பிய அவர், இந்த விபத்தில் மாநிலத்தைச் சேர்ந்த 31 பயணிகளை காணவில்லை என்று வலியுறுத்தினார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பஹானகா பஜார் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரும்பு தாது ஏற்றப்பட்ட சரக்கு ரயில் மீது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி தடம் புரண்டது. அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த  யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது கோரமண்டல் ரயில் தடம் புரண்ட சில பெட்டிகள் மோதி விபத்துக்குள்ளானது.  கடந்த 30 ஆண்டுகளில்  இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த ரயில்வே விபத்தில் 1100 பேர் காயமடைந்தனர்.

click me!