வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலைக்குள் புயலாக மாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் உருவாகிய பிறகு, அப்புயலானது ஈரான் வழங்கிய பெயரான 'ஹமூன்' என்று அழைக்கப்படும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடகிழக்கு நோக்கி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 400 கிமீ தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் திகாவிலிருந்து 550 கிமீ தென்-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது. “அடுத்த 12 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 25ஆம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே வங்கதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஒடிசா அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கனமழை ஏற்பட்டால் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த புயல் ஒடிசா கடற்கரையில் இருந்து 200 கி.மீ தொலைவில் கடலில் நகரும் என்று வானிலை விஞ்ஞானி யு.எஸ்.டாஷ் கூறியுள்ளார். அதன் தாக்கத்தால், திங்கள்கிழமை ஒடிசாவின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், அடுத்த இரண்டு நாட்களில் மாநிலங்த்தின் பல்வேறு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கியோஞ்சார், மயூர்பஞ்ச் மற்றும் தேன்கனல் தவிர வடக்கு மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது. காலநிலையை கருத்தில் கொண்டு, துர்கா பூஜை அமைப்பாளர்களும் அதற்கு தயாராகி வருகின்றனர்.