ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற காவலரின் மனநிலை நன்றாக இருந்துள்ளது என்று போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் சேத்தன் குமார் சவுத்ரி கடந்த ஜூலை மாதம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் டிக்கா ராம் மீனா மற்றும் பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேத்தன் குமார் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு காவலருக்கும், ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், உயிரிழந்த மற்ற 3 பேரும் முஸ்லிம்கள். அவர்களது மதம் சார்ந்து இழிவாக பேசி அவர்கள் மூவரையும் சேத்தன் குமார் சவுத்ரி சுட்டதாக வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பன போன்ற தகவல்களும் வெளியாகின.
இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு காவலர் சேத்தன் குமார் சவுத்ரியின் மனநிலை நன்றாக இருந்துள்ளது எனவும், சம்பவத்தன்று என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்துள்ளார் என இந்த விவகாரத்தில் ரயில்வே போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக அரசு அதிரடி நடவடிக்கை: தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
மும்பை புறநகரில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 1,000 பக்கங்களுக்கு மேல் உள்ள குற்றப்பத்திரிகையில், 150க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164 இன் கீழ் போரிவலி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதுபோன்ற மூன்று சாட்சிகளின் வாக்குமூலங்களை அவர்கள் பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
சாட்சிகளின் சாட்சியங்களுக்கு மேலதிகமாக, புலனாய்வாளர்கள் ரயிலுக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விவரங்களை சேகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.