
உத்தரபிரதேச சுற்றுலா பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்ட நிலையில் அதன் சுற்றுப்புறத்தை தூய்மை படுத்தும் நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டது பாஜகவினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச சுற்றுலா குறிப்பேட்டில் இருந்து தாஜ்மஹாலை நீக்கி அம்மாநில அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதையடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து உ.பி முதலமைச்சர் ஆதித்யநாத், நமது கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும் இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது தான் தாஜ்மஹால் எனவும் தெரிவித்தார்.
சங்கீத் சோமின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் நிலம் முகலாய அரசர் ஷாஜகானால் ஜெய்ப்பூர் மன்னரிடமிருந்து திருடப்பட்டது எனவும் ஷாஜகான் ஜெயப்பூர் மன்னரை வற்புறுத்தி அந்த நிலத்தை விற்க வைத்ததற்கு ஆதாரம் உள்ளது எனவும் பாஜக நிர்வாகி சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தாஜ்மஹால் சுற்றுப்பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தாஜ்மஹாலை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.