
பா.ஜனதா கிளப்பிய சர்ச்சைக்குப் பதிலடி கொடுத்த கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா, ‘‘மீன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குச் செல்வதில் தவறு இல்லை’’ என்றார்.
தனது உணவு விருப்பம் குறித்து பா.ஜனதா கவலைப்படுவதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மீன் சாப்பிட்டுவிட்டு
முதல்–-அமைச்சர் சித்தராமையா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் மீன் சாப்பிட்டுவிட்டு, அந்த மாவட்டத்தில் உள்ள புனித தலமான தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
சித்தராமையா மீன் சாப்பிட்டுவிட்டு தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றது சரியல்ல என்று பா.ஜனதாவினர் குறை கூறியுள்ளனர்.
எந்த கடவுளும் சொல்லவில்லை
அதற்குப் பதில் அளிக்கும் வகையில் தார்வாரில் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, ‘‘மீனோ அல்லது இறைச்சியோ சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வதில் தவறு இல்லை. மீன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வர வேண்டாம் என்று எந்த கடவுளும் சொல்லவில்லை’’ என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இதுபற்றி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
பா.ஜனதா தோல்வி
அதில், “கர்நாடகத்தை ஆட்சி செய்வதில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. அந்த கட்சி, நான் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றியும், எனது உணவு விருப்பத்தையும் பற்றி கவலைப்படுகிறது.
அந்த கட்சியினர் பசவண்ணரின் கொள்கைகளில் இருந்து எதுவுமே கற்கவில்லையா?. எனது உடலே ஒரு கோவில். இருப்பவர்கள் சிவன் கோவில் கட்டுகிறார்கள். என்ன செய்வது நான் ஏழை அய்யா. எனது காலே கம்பம். உடலே இறைவன். தலையே கவசமய்யா’’ என்று குறிப்பிட்டுள்ளார்.